ICC WC 2023: உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


இம்முறை உலகக்கோப்பையை இந்தியா தனி நாடாக நடத்துகிறது. இந்தியா உலகக்கோப்பையை தனியே நடத்துவது இதுதான் முதல் முறை. இதற்கு முன்னர் நடத்தியபோதெல்லாம் அண்டை நாடுகளுடன் இணைந்துதான் தொடரை நடத்தியுள்ளது. 


உலகக்கோப்பை தொடர் குறித்து நாளுக்கு நாள் செய்திகள் நாளிதழ்களின் பக்கங்களை நிரப்பியவாறே உள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களின் கணிப்புகளும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை குறித்த பார்வையும் பெரிதும் கவனம் பெற்று வருகிறது. 




அவ்வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான விரேந்திர சேவாக் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் அடிக்கும் வீரராக இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா இருப்பார் என கூறியுள்ளார். இது குறித்து ஐசிசி-யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் சேவாக்கிடம் இம்முறை யார் அதிக ரன்கள் குவிப்பார் என கேட்பட்ட கேள்விக்கு, என்னிடம் இரண்டு பதில்கள் உள்ளன. ஆனால் நான் ஒரு இந்தியன் என்பதால் எனது தேர்வில் உள்ள இந்திய வீரராக ரோகித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கடந்த முறை நடைபெற்ற உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ரோகித் சர்மா இம்முறையும் அதிக ரன்கள் குவிப்பார் என கூறியுள்ளார். மேலும் உலகக்கோப்பைத் தொடர் வந்து விட்டால் ரோகித் சர்மாவின் ஆட்ட நேர்த்தி என்பது முற்றிலும் மாறுபட்டதாக மாறிவிடும். அதுவும் இம்முறை கேப்டனாக ரோகித் சர்மாவே இருப்பதால் அவருடைய ஆட்டம் அதிரடியாக இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.






மேலும் அவர் கூறுகையில், இம்முறை உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், இந்திய மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும் என்பதால் தொடக்க ஆட்டக்காரர்களால் அதிக ரன்கள் குவிக்க முடியும் எனவும் அந்த வீடியோவில் சேவாக் கூறியுள்ளார். 




கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ரோகித் சர்மா 5 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 648 ரன்கள் குவித்திருந்தார். மேலும் அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ரோகித் சர்மா என்ற பெருமையைப் பெற்றார்.