IND Vs NZ T20 WC Final: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்னதாக, ராசி இல்லை என வேறு ஓட்டலுக்கு இந்திய அணி மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ..

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதனிடையே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் உள்ள பயிற்சியாளர் குழுவில் உள்ள முக்கிய நபர், போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில் பிரார்த்தனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம். இந்திய அணிக்கான வெற்றிக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்க, பிசிசிஐ தயாராக உள்ளதாம். அதற்கு உதாரணமாக தான், சந்திர கிரகணத்தால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை தவிர்க்க, மும்பையில் நடைபெற்ற அரையிறுதி போட்டிக்கான பயிற்சியினை கூட, 45 நிமிடங்கள் தாமதமாக வீரர்கள் தொடங்கியுள்ளனர். அதற்கு மேலும் ஒரு படி மேலே சென்று, இறுதிப்போட்டிக்கு முன்னதாக அகமதாபாத்தில் இந்திய வீரர்கள் தங்கும் ஓட்டலை பிசிசிஐ மாற்றியுள்ளது.

”லக் இல்லை” ஓட்டலை மாற்றிய இந்திய அணி

குறிப்பிட்ட ஓட்டலில் தங்கியிருந்து அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடிய இரண்டு முக்கிய போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியுற்றது. அது 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இறுதிப்போட்டி மற்றும் தற்போதைய டி20 உலகக் கோப்பையின் சூப்பர் சுற்றில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டி ஆகும். எனவே, குறிப்பிட்ட ஓட்டல் இந்திய அணிக்கு ”லக்” ஆக அமையவில்லை என கூறி வீரர்கள் தங்குவதற்கான ஓட்டல் மாற்றப்பட்டுள்ளது. இது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி கோப்பையை வெல்ல உதவுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

எள்ளி நகையாடும் நெட்டிசன்கள்

பிசிசிஐ நிர்வாகத்தின் ஓட்டலை மாற்றும் முடிவு தொடர்பான தகவல் வெளியானதுமே நெட்டிசன்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன்படி, “மைதானத்தில் திறமையை வெளிப்படுத்த தவறவிட்டு, ராசி நட்சத்திரம் பார்த்தால் மட்டுமே வெற்றி வசமாகி விடுமா? லக் இல்லை என்றால் மாற்ற வேண்டியது மைதானத்தை தானே? ஏன் அதை செய்ய மறுக்கிறீர்கள்? கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? ஓட்டலுக்கும் வெற்றிக்கும் என்னயா  டொடர்பு?” என எள்ளி நகையாடி வருகின்றனர்.

சிவப்பு ஆடுகளம் அமைக்கப்படுமா?

இதே அகமதாபாத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக சூப்பர் 8 சுற்றில் தென்னாப்ரிக்கா அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போது அமைக்கப்பட்டு இருந்த கருப்பு நிற ஆடுகளம் இந்திய அணிக்கு பெரும் தோல்வியை பரிசளித்தது. எனவே, இறுதிப்போட்டிக்கு சிவப்பு நிற ஆடுகளம் தயார் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் சிவப்பு, கருப்பு மற்றும் இரண்டும் கலந்த கலவை என மூன்று வகையான ஆடுகள தேர்வுகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவப்பு நிற ஆடுகளம் மட்டுமே கொண்டுள்ள வான்கடே மைதானம், இந்தியாவின் பேட்டிங் எவ்வளவு வலுவானது என்பதை அரையிறுதியில் வெளிப்படுத்தியது. அதனை கருத்தில் கொண்டு, இறுதிப்போட்டிக்கும் சிவப்பு நிற ஆடுகளமே அமைக்கப்படலாம்.