டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 12வது நாளான இன்று, இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அபு தாபி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில், வங்கதேசம் - தென்னாப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. க்ரூப்:1-ல் இடம் பிடித்திருக்கும் இந்த அணிகளில், இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி வங்கதேசம் கடைசி இடத்தில் உள்ளது. மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து தென்னாப்ரிக்கா, இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணிக்கு நான்காவது ஓவர் முதலே விக்கெட்டுகள் சரிய தொடங்கின. ஓப்பனர் லிட்டன் தாஸை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப்ப ரன்களுக்கு வெளியேறினர். இந்த இன்னிங்ஸில் மொத்தமாகவே 1 சிக்சர், 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை, ரபாடா (3), நார்ஜே (2), ஷம்ஸி (2). ப்ரிட்டோரியஸ் (1) ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால், 18.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 84 ரன்கள் குவித்தது வங்கதேசம்.
எளிதான இலக்கை சேஸ் செய்த தென்னாப்ரிக்காவுக்கு, வங்கதேச வீரர்கள் ஷாக் தந்தனர். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து தென்னாப்ரிக்கா தடுமாற தொடங்கியது. 33 ரன்களை எட்டி இருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாப்ரிக்க அணி, 80 ரன்கள் எட்டும் வரை விக்கெட்டை இழக்காமல் இலக்கை நெருங்கியது. இதனால், 13.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.
இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளூக்கு எதிரான போட்டிகளை அடுத்து தென்னாப்ரிக்காவிடமும் வங்கதேசம் தோல்வியைத் தழுவி 4/4 போட்டிகளில் வீழ்ந்திருக்கிறது. தென்னாப்ரிக்காவை பொருத்தவரை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி கண்டு அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்