ICC T20 Worldcup Broadcast: இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை போட்டியில், மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
ஐசிசி டி20 உலகக்கோப்பை:
கிரிக்கெட் ரசிகர்களின் பல மாத காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக நாளை, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது. பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நீளும் இந்த போட்டியில், 20 அணிகள் பங்கேற்க 55 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்று, அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டி என அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சிகளில் மற்றும் தொலைபேசிகளில் எப்படி? எதில்? பார்ப்பது என்ற ரசிகர்களின் பிரதான கேள்விக்கான பதிலை இந்த தொகுப்பில் அறியலாம்.
டி20 உலகக் கோப்பையை எங்கு பார்க்கலாம்?
இந்தியாவை பொறுத்தவரையில் ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலிலும் போட்டியின் நேரலையை கண்டுகளிக்கலாம். அனைத்து போட்டிகளும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் என இரண்டிலும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் மட்டுமே போட்டியை காணக்கூடிய ரசிகர்களுக்கு ஜியோ செயலியில் வெர்டிகல் வீடியோ ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளது.
தியேட்டரிலும் கிரிக்கெட் அனுபவம்..
தொலைக்காட்சியையும் தாண்டி மிகப்பெரிய திரையில் தங்களது பிடித்தமான வீரர்களை காண வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஜியோ ஸ்டார் நிறுவனமானது, PVR Inox நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் மூலம், பல டி20 உலகக் கோப்பை போட்டிகள் நாடு முழுவதும் திரையரங்குகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக போட்டியின் லைவ் கவரேஜானது, ஐசிசியின் அதிகாரப்பூர்வ செயலியில் ஆடியோ கமெண்ட்ரியும் வழங்கப்பட உள்ளது.
டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள மைதானங்கள்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டுக் கழக (SSC) கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டியில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
