உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் இந்த தொடரில் விறுவிறுப்பு அதிகமாகியுள்ளது.

  


ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. சென்னை மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆஃப்கானிஸ்தான் அணி இந்த முடிவினை எடுத்தது. 


இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை இந்த முறை கான்வே மற்றும் யாங் தொடங்கினர். சிறப்பாக ஆடிவந்த இந்த கூட்டணி சூழலுக்கு ஏற்ப ரன்கள் சேர்த்து வந்தது. நிதானமாக விளையாடி வந்த கான்வே தனது விக்கெட்டினை முஜீப் பந்து வீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடிகாட்ட நியூசிலாந்து அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் யாங் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாச ஆஃப்கான் அணி என்ன செய்வது எனத் தெரியாமல் திணறியது. 


போட்டியின் 21வது ஓவரை வீசிய அஸ்மதுல்லா அந்த ஓவரில் மட்டும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த ரச்சின் மற்றும் யாங் ஆகியோரது விக்கெட்டுகளை ஒரே ஒவரில் கைப்பற்றி அசத்தினார். அதேபோல் 22வது ஓவரில் மிட்ஷெல்லின் விக்கெட்டினை ரஷித் கான் வீழ்த்த நியூசிலாந்து அணி நெருக்கடிக்கு ஆளானது. 


இதையடுத்து கைகோர்த்த லாதம் மற்றும் பிலிப்ஸ் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்பதில் மிகக் கவனமாக விளையாடினர். இருவரும் ஆஃப்கானிஸ்தான் அணியின் சவாலான சுழற்பந்து வீச்சில் விக்கெட்டினை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதையடுத்து இருவரும் ஒருகட்டத்தில் ஆஃப்கான் அணியின் சுழற்பந்து மற்றும் வேகம் என அனைத்து பந்துகளையும் துவம்சம் செய்தனர். அதாவது போட்டியின் 20வது ஓவரில் இருந்து  29வது ஓவர் வரை பவுண்டரியும் சிக்ஸரும் நியூசிலாந்து தரப்பில் அடிக்கப்படவில்லை.  ஆனால் அதன்பின்னர் இருவரும் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினர். 


இதனால் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து நங்கூரம் போல் நின்றுவிட்டனர். இருவரும் இணைந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்த பின்னர், நவீன் உல்-ஹக் வீசிய 48வது ஓவரில் இருவரும் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இதனால் ஆஃப்கான் அணிக்கு பெரிய அளவில் பயன் இல்லை என்றாலும், விக்கெட்டுகள் கைப்பற்றியது மட்டும் ஆறுதல் அளித்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 288 ரன்கள் குவித்தனர். 


அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கான் அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியதால், ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரிடமும் ஆஃப்கானிஸ்தான் அணி மொத்தமாக சரணடைந்தது. இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது.