உலகக் கோப்பை 2023ல் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிந்துவிட்டன. இப்போது இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முறையே 4 அணிகள் மோத இருக்கின்றன. இந்த உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நவம்பர் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், இரண்டாவது உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். பின்னர் அந்த இரு அணிகளுக்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகின்ற நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 


ரிசர்வ் நாள் தொடர்பான விதிகளை வெளியிட்ட ஐசிசி: 


இப்படிப்பட்ட நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின்போது மழை பெய்தால் என்னவாகும் என்ற கேள்வி பல கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு போட்டிகளுக்கும் தலா ஒரு நாள் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி உறுதி செய்துள்ளது. எனவே, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் மழை பெய்தால், அந்த போட்டி நாளை மறுநாள் நிறைவடையும். 


(இன்று) நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் மழை பெய்தால் (ரிசர்வ் நாள்) நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும். அதே சமயம், நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில் மழை பெய்தால் ரிசர்வ் நாள் நவம்பர் 17ஆம் தேதியும், நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியின் ரிசர்வ் நாள் நவம்பர் 20ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ரிசர்வ் நாளில் கூட போட்டியின் முடிவு தெரியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு சாதகமாக இருக்கும். உதாரணமாக, இன்று நடைபெற இருக்கும் போட்டி மழையால் நாளை ஒத்திவைக்கப்படுகிறது என வைத்து கொள்வோம். இந்த நிலையில் நாளைய போட்டியிலும் மழை குறுக்கிட்டால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியான இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 


2019 உலகக் கோப்பை அரையிறுதியில் என்ன நடந்தது..? 


2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கோலி தலைமையிலான இந்திய அணியும் மோதியது. அந்த போட்டியிலும் மழை ஒரு தடையாக இருந்தது. அதன் பிறகு அந்த போட்டி அடுத்த நாளான ரிசர்வ் நாளில் நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த முறை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், நியூசிலாந்து தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இவர்கள் இருவருக்குமான அரையிறுதி போட்டி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.