இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில்  டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு பதிலாக கூப்பர் கானலி மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்திய அணியை பொறுத்தவரை மாற்றம் எதுவும் இன்றி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.

முதல் ஓவரில் கேட்ச்: 

போட்டியின் முதல் ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார், ஓவரின் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் கொடுத்த  கடினமான கேட்ச்சை ஷமி கோட்டைவிட்டார், இதனால் மறுவாழ்வு கிடைத்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆட ஆரம்பித்துள்ளார்.  

இருப்பினும் முகமது ஷமி மற்றொரு தொடக்க ஆட்டக்காரான கூப்பர் கன்னோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். 

விக்கெட்டை தூக்கிய வருண்: 

கேட்ச்சை விட்டவுடன் எங்கே 2023  உலகக்கோப்பை போல ஆகிவிடுமோ என்று ரசிகர்களுக்கு பயந்த நிலையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 9வது வீச வந்தார், முதல் பந்தை ஸ்மித் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தை சந்தித்த ஹெட் சிக்சருக்கு ஆசைப்பட்டு தூக்கி அடித்தார், அப்போது லாங் ஆன் திசையில் நின்றிருந்த துணைக்கேப்டன் சுப்மன் கில் சுலபமாக கேட்ச் பிடித்தார், இதன் மூலம் முகமது ஷமி  நிம்மதி பெருமூச்சுவிட்டார். டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.