Hardik Pandya: நடப்பு உலகக் கோப்பையில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து, இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர், பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.






ஹர்திக் பாண்ட்யா காயம்:


கடந்த மாதம் புனேவில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில், பந்துவீசியபோது ஹர்திக் பாண்ட்யாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவருக்கு, இந்தியா விளையாடிய கடைசி நான்கு போட்டிகளிலும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக உள்ள ஹர்திக் பாண்ட்யா, அரையிறுதியின் போது நிச்சயம் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வரையிலும் கணுக்கால் காயம் குணமடையாததால், உலகக் கோப்பையில் மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகக் கோப்பையில் பாண்ட்யா: 


உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடிய முதல் நான்கு லீக் போட்டிகளிலும், ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். பேட்டிங்கில் 11 ரன்கள் சேர்த்த நிலையில், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.


பிரஷித் கிருஷ்ணா அணியில் சேர்ப்பு:


ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பையில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக, இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 19 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். கடைசியாக உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் தொடரிலும் பிரஷித் கிருஷ்ணா விளையாடியது குறிப்பிடத்தக்கது. பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோருக்கு மாற்றாக, கிருஷ்ணாவிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினமே.


இந்திய அணி:


இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை 7 லீக் போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணியாகவும் உள்ளது. இன்னும் தென்னாப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு லீக் போட்டிகள் உள்ளன. ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா என இரண்டு நட்சத்திர ஆல்-ரவுண்டர்களை மட்டுமே கொண்டிருந்தது. இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேநேரம், அவருக்கு பதிலாக கடந்த 3 போட்டிகளிலும் களமிறங்கிய, ஷமி பந்துவீச்சில் அசத்தி வருகிறார். மூன்று போட்டிகளில் சேர்த்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.