டி20 உலகக் கோப்பை வெற்றி:


கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை இந்திய அணி தவறவிட்டது. ஆனால் டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.


ஒரு நாள் உலகக் கோப்பையின் போது இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி 11 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் கடைசியில் தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. அதே நேரம் டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து டி20 உலகக் கோப்பை வெற்றி பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அவ்வப்போது பேசி வருகின்றனர். இச்சூழலில் 2007 மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிகளில் எது சிறந்தது என்று ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். 


2007 - 2024 எந்த உலகக் கோப்பை சிறந்தது:


இது தொடர்பாக அவர் பேசுகையில்,"2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை பார்க்கும் போது அதில் 2007 உலகக் கோப்பையை விட அதிகமான மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள், 2007இல் டி20 என்பது எங்களுக்கு பெரிதாக என்னவென்று தெரியாத புதிய ஃபார்மட்டாக இருந்தது. நாங்கள் முதல் முறையாக விளையாடினோம்.


உண்மையில் அந்த சமயத்தில் டி20 பற்றிய புரிதல் எங்களுக்கு தெரியாது. நாங்கள் போகிறப் போக்கில் விளையாடி தொடர்ந்து வென்றோம். மேலும் 2007இல் நிறைய நட்சத்திர வீரர்கள் அணியில் இல்லை. யுவராஜ் சிங், சேவாக், நான், அஜித் அகர்கர் போன்றவர்களை தவிர்த்து மற்றவர்கள் புதுமுக வீரர்களாக இருந்தனர்.


எம்எஸ் தோனி முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டார். ஆனால் 2024இல் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற அனைவருமே பெரிய மேட்ச் வின்னர்கள். அதன் பின் சூர்யகுமார், அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட் ஆகியோரும் இருந்தனர்."என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.