நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஆசிய கோப்பைக்கு முன்னதாக காயங்களில் இருந்து மீண்டு வந்து களத்திற்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
ஷ்ரேயாஸ் - பும்ரா
வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான கட்டமைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது பெரிய ஊக்கத்தைப் பெறுவது போல தெரிகிறது. உயர் தர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தூண் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த ஆசிய நாடுகள் ஆடும் தொடருக்கு முன் தங்கள் காயங்களில் இருந்து மீண்டு களத்திற்கு வர வாய்ப்புள்ளது. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கையால் நடத்தப்படும் இந்த ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறவுள்ளது.
ஆசியக்கோப்பை
ஆறு நாடுகள் பங்கேற்கும் இந்த ஆசிய கோப்பை போட்டியை கடைசியாக இலங்கை அணி வென்றது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) போட்டி ஹைபிரிட் மாதிரியில் நடத்தப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தான் ஆடும் நான்கு லீக் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் நடத்தப்படுவதாகவும், இந்தியா பாகிஸ்தான் போட்டி உட்பட மற்ற அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கும் என்றும் கூறி பலநாள் பஞ்சாயத்து தீர்த்து வைக்கப்பட்டது. ஆசிய கோப்பையின் முந்தைய பதிப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் அந்த தொடரில் இருந்து இந்திய அணி லீக் போட்டியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
பும்ரா, ஷ்ரேயாஸ்-க்கு என்சிஏவில் பிசியோதெரபி
ESPNCricinfo அறிக்கையின்படி, பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) 'லைட் பந்துவீச்சு' பயிற்சிகளை தொடங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. முக்கியமாக பிசியோதெரபிக்காக இப்போது என்சிஏவில் இருக்கும் பும்ரா, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஐ தொடருக்குப் பிறகு இந்தியாவுக்காக விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக அவர் நியூசிலாந்தில் முதுகு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஷ்ரேயாஸ்-க்கு அறுவை சிகிச்சை
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையையும் தவறவிட்டார். காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் தனது கீழ் முதுகில் ஏற்படும் அழுத்தத்தை சீராக்க நீண்ட காலமாக மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார். அதனால் தொடர்ச்சியான முதுகு வலி காரணமாக 2022 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. பும்ராவின் சக வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் ஆடமுடியாமல் போனது. ஷ்ரேயாஸ் ஐயர் 2023 ஐபிஎல் பதிப்பைத் தவறவிட்ட நிலையில், முதுகில் அறுவை சிகிச்சை செய்தார். செப்டம்பரில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா மீண்டும் களமிறங்குவது குறித்து NCA மருத்துவ ஊழியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.