23 வயதான சுப்மன் கில், தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் நிதானமாக ஆடி தந்து இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். இரண்டாவது நாள் ஆட்டத்திற்குப் பிறகு ஊடகங்களில் பேசும்போது அமைதியாகவும், எளிமையாகவும் பேசிய அவர் களத்தில் பார்க்கும் கில் அல்ல. இரண்டாம் நாளின் முடிவில் அவர் நாதன் லயன் பந்தை சிக்ஸருக்கு விரட்டியபோதும், கேமரூன் கிரீனின் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய போதும், ரிஸ்க் எடுக்க அஞ்சாத அவரது துணிவு அனைவரையும் கவர்ந்தது. "இது போன்ற விக்கெட்டுகளில், சரளமாக ரன்களை எடுப்பது கொஞ்சம் கடினம், ஆனால் சான்ஸ் கிடைக்கும்போது குறிவைத்து தாக்க முயற்சிப்பது எப்போதும் முக்கியம். அதைத்தான் நான் செய்ய முயற்சித்தேன், ”என்று கில் கூறினார்.



பவுன்சர்களை ஆடத்துவங்கிய கில்


353 நிமிடங்களில் கிரீஸில் நின்ற கில், கேப்டன் ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகிய மூவருடனும் 50 ரன்களுக்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி இந்தியாவை ஆட்டத்தில் முன்னேற வைத்தார். “நீங்கள் பவுன்சர்களை விளையாடியவுடன் எல்லாமே எளிதாகும். நான் சிமென்ட் தரையில் ஒரு பிளாஸ்டிக் பந்தைக் கொண்டு பவுன்சர்களை ஆட பயிற்சி செய்தேன். கொஞ்சம் ஃபுல் லெந்த்தில் வரும் பந்துகளை ஆட மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ததால் இன்னும் சிறப்பாக இருந்தது. மேலும் இது எல்லாவற்றையும் விட உள்ளுணர்வு நன்றாக இருந்தது, ”என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: படுத்தியெடுக்கும் H3N2 வைரஸ்...செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? உலக சுகாதார அமைப்பு சொல்வதை கேளுங்கள்..!


பொறுமை முக்கியம்


ரோஹித்தின் வெளியேற்றத்திற்குப் பிறகு, கில் நேர்த்தியாக ஆடி, 247 பந்துகளில் 113 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி எல்லா பந்துகளையுமே பேட்டின் நடுப்பகுதியில் வாங்கி, எந்த பந்தையுமே ஸ்லிப்பிற்கு செல்ல விடாமல் பார்த்துக்கொண்டார். "பிட்சில் பௌலர்களுக்கு அதிக உதவி இல்லை, அவர்கள் 480 ரன்கள் எடுத்தனர், எனவே நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழக்காமல், நாள் முழுவதும் பேட் செய்வது முக்கியம் என்று நினைத்தோம். பின்னர், நம் ஆட்ட முறையை நாம் கடைப்பிடித்தால், ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடிக்கலாம். சவாலான சூழ்நிலைகளில் உங்கள் பொறுமையை இழக்காததுதான் என் ஆட்ட முறை.



அசல் ஆட்டத்தை ஆட வேண்டும்


2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது டெஸ்ட் வாழ்க்கையை துவங்கிய அவர், நல்ல தொடக்கம் கிடைக்கும்போதெல்லாம் அதனை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறி வந்தார். அவரது ஆட்டத்தை அவரே மதிப்பீடு செய்ய வேண்டி இருந்தது. "இடையில், நான் 40 மற்றும் 50 ரன்களை மட்டுமே எடுத்துக்கொண்டிருந்த ஒரு கட்டம் இருந்தது. செட்டில் ஆன போது, நான் டிஃபன்ஸ்-ஐ குறைக்க ஆரம்பித்தேன். தொடக்கத்தை பெரிய ரன்னாக மாற்றும் முயற்சியில் என் மீது நானே அதிக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது என் விளையாட்டல்ல. எனவே, நான் செட்டில் ஆன பின்னும், டிஃபன்ஸ் ஆட்டத்தில் இருந்து வெளியேறக்கூடாது என்று முடிவெடுத்தேன், ஏனென்றால் அது எனது அசல் விளையாட்டு அல்ல என்று எனக்கு நானே சொல்ல வேண்டியிருந்தது. கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்", என்று கூறினார். கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டோகிராமில் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 110 ரன்கள் எடுத்ததால் அந்த நகர்வு பலனளித்தது. இது அவரது நம்பிக்கையை அதிகரித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது சொந்த ஒப்புதலின்படி, டெஸ்ட் கிரிக்கெட் என்பது "முடிந்தவரை அதிக நேரம் களத்தில் நிற்கவேண்டும்" என்பது தான்.