David Johnson Death: கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் இன்று காலமானார். 52 வயதான டேவிட் ஜான்சன் வீட்டின் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொத்தனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கனகஸ்ரீலே அவுட்டில் உள்ள எஸ்.எல்.வி பாரடைஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இன்று முற்பகல் 11.15 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். டேவிட் ஜான்சன் மரணம் தொடர்பாக தகவல் அறிந்ததும் கொத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நோயால் அவதிப்பட்டு வந்த டேவிட் ஜான்சன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கொத்தனூர் காவல்துறையினர் மேலும் பல தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதையடுத்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சனின் மறைவிற்க்கு கிரிக்கெட் உலகத்தினரை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது கிரிக்கெட் சகாவான டேவிட் ஜான்சனின் மரணச் செய்தியால் நான் வருத்தமடைந்துள்ளேன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்.” என பதிவிட்டு இருந்தார்.
யார் இந்த டேவிட் ஜான்சன்..?
1971ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரேயில் பிறந்த டேவிட் ஜான்சன், இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1996ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான டேவிட் ஜான்சன், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் டேவிட் ஜான்சன் மணிக்கு 157.8 கிமீ வேகத்தில் பந்துவீசி ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஸ்லேட்டரை வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். இது அன்றைய காலத்தில் அதிவேக பந்துவீச்சாக பார்க்கப்பட்டது. இது தவிர, டேவிட் ஜான்சன் ஒரு பேட்ஸ்மேனாக 4 சராசரியில் 8 ரன்கள் எடுத்தார்.
அதேசமயம் டேவிட் ஜான்சன் 26 டிசம்பர் 1996 அன்று இந்தியாவுக்காக கடைசியாக விளையாடினார். அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவே இல்லை. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் பிற லீக்குகளில் தொடர்ந்து விளையாடினார்.
டேவிட் ஜான்சன் மொத்தம் 39 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஆல் ரவுண்டராக பார்க்கப்பட்ட டேவிட் ஜான்சன் தனது பேட்டிங் மூலம் 437 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.