இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின். பந்துவீச்சில் பல பெரிய சாதனைகளை படைத்துள்ள அஸ்வின் நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். இந்த போட்டி அவரது 100வது டெஸ்ட் போட்டி ஆகும்.


முன்னாள் வீரரை அவமதித்தாரா அஸ்வின்?


100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் அஸ்வினுக்கு வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தும் அவர் பதில் அளிக்காதது அதிருப்தி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 100வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக வாழ்த்துவதற்கு சில முறை ஃபோன் செய்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை கட் செய்தேன். அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. மூத்த வீரருக்கு கிடைத்த மரியாதை இதுதான் “


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஆதரவும், எதிர்ப்பும்:


லட்சுமண் சிவராமகிருஷ்ணனும் அஸ்வினைப் போலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். அவரின் குற்றச்சாட்டிற்கு இணையத்தில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது. 59 வயதான சிவராமகிருஷ்ணன் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 130 ரன்களும், 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 26 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


இதுதவிர 76 முதல் தர கிரிக்கெட்டில் ஆடி 1802 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் ஆடி 47 ரன்களும் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 154 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


மூத்த வீரரான ஒருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு இந்திய அணி வீரர் தனக்கு உரிய மரியாதை அளிக்காததற்கு ஆதங்கப்பட்டிருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 309 ரன்களும், 116 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 707 ரன்களும், 65 டி20 போட்டிகளில் ஆடி 184 ரன்களும் எடுத்துள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் ஐ.பி.எல். தொடரில் சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார்.