Deepti Sharma Record: கிரிக்கெட் உலகில் புதிய வரலாறு! உலகக் கோப்பையில் தீப்தி சர்மா படைத்த சாதனை என்ன தெரியுமா?
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா. அவர் என்ன சாதனை செய்தார் தெரியுமா?

ஆடவர், மகளிர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுவரை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா.
மும்பையில் நேற்று நடைபெற்ற 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, மொத்தமாக சுமார் 123 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வென்றதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) பரிசுத் தொகையாக 4.48 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 39.78 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டிற்கு திருப்புமுனையாக அமைந்த நாளிற்கு மிக முக்கியமானவர் தீப்தி சர்மா. இவர், உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் சாதனையை ஒன்று செய்துள்ளார். நேற்று நவிமும்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய 27 வயதான தீப்தி சர்மா, இந்தியாவை முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய வீரராக கருதப்படுகிறார்.
இறுதிப்போட்டியில், 58 ரன்கள் மற்றும் 39 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பல ஆண்டு காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாற்று வெற்றியை உறுதி செய்தது. இந்தபோட்டியில், தீப்தி சர்மா இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும், வீராங்கனையும் செய்யாத சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை செய்யாத சாதனை:
* உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் அரைசதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் தீப்தி சர்மா.
* ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரங்கணை ஆவார்.
* 2011 ஆண்கள் உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் இந்த சாதனை படைத்த முதல் வீரர் ஆவார். அதன்பிறகு, இந்த சாதனையை படைத்த இரண்டாவது இந்தியர் தீப்தி சர்மா மட்டுமே ஆவார்.
தீப்தி சர்மாவின் தொடர்ந்து நிலையான ஆட்டத்தால் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதையும் தட்டிச்சென்றுள்ளார். 2025 உலகக்கோப்பையில் 215 ரன்கள் மற்றும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கணை ஆவார்.
தீப்தி சர்மாவின் பேட்டி
"நான் அணிக்காகவும் நாட்டிற்காகவும் என்னால் முடிந்த எந்த வகையிலும் பங்களிக்க விரும்பினேன். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதைச் செய்வது என்பதை ஒரு அதிசயமாக உணர்கிறேன். இந்த தருணம் என்றென்றும் என்னுடன் இருக்கும்” என்று ஆட்ட நாயகி விருதைப் பெற்ற பிறகு தீப்தி கூறினார்.
தீப்தி சர்மாவின் வீரதீரச் செயல்கள் இந்திய கிரிக்கெட்டில் சாத்தியமானதை மறுவரையறை செய்துள்ளன. அவரது சாதனை ஒரு தனிப்பட்ட வெற்றியாக மட்டுமல்லாமல், பெண்கள் விளையாட்டு வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாகவும், வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகவும் நிற்கிறது.




















