ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம், அனைத்து வகையாக கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 


ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஹபர்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியானது ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் டேவிட் வார்னரின் 100வது சர்வதேச டி20 போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் அதிரடியாக பேட்டிங் செய்து 22 பந்துகளில் ஐம்பது ரன்களை எட்டினார். அதே சமயம், 36 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உதவியுடன் 70 ரன்கள் எடுத்து ஜோசப் அல்சாரி பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன்மூலம், டேவிட் வார்னர் தனது பெயரில் விசித்திரமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு செய்த முதல் பேட்ஸ்மேன்: 


நேற்றைய போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னர் மூன்று வடிவங்களிலும் தனது 100வது போட்டியில் ஐம்பது ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இதுவரை, கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை படைத்ததில்லை. 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வார்னர் 124 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது 100வது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் எடுத்தார். தற்போது, ​​அவர் தனது 100வது சர்வதேச டி20 போட்டியில் ஐம்பது ரன்களை கடந்து வரலாறு படைத்தார். 






தனித்துவ சாதனைகள்: 


ஆஸ்திரேலிய அணிக்காக 100வது டி20 போட்டியில் விளையாடியதன் மூலம், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் (103) மற்றும் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் (100) ஆகியோருடன் இணைந்து இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் ஆனார். 


இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்ற்ம் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோருக்கு பிறகு அனைத்து வடிவங்களிலும் 100 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் டேவிட் வார்னர் படைத்தார். 


டி20 போட்டியில் 100 அரைசதம்: 


சர்வதேச டி20 போட்டியில் டேவிட் வார்னர் தனது 37வது அரைசதத்தை அடித்தாலும், ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் இது அவரது 100வது அரைசதமாக அமைந்தது. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்தார். வார்னருக்குப் பிறகு, டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த சாதனை விராட் கோலியின் பெயரில் உள்ளது. இதுவரை விராட் கோலி டி20யில் 91 முறை அரைசதம் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், டி20 வடிவத்தில் 88 அரை சதங்களை அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேசமயம், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, வார்னருக்குப் பிறகு, இந்த டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த சாதனை ஆரோன் ஃபின்ச் பெயரில் உள்ளது. இவர் இதுவரை 77 அரைசதங்கள் அடித்துள்ளார்.