இந்தியாவில் ஐபிஎல் தொடர் நீண்ட ஆண்டுகளாக மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் மூலம் பல புதிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட வந்துள்ளனர். இதன்காரணமாக இந்தியாவில் மகளிர் ஐபிஎல் தொடர் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக எழுந்திருந்தது. இந்தச் சூழலில் பிசிசிஐ தலைவர் கங்குலி 2023ஆம் ஆண்டு நிச்சியம் மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். 


 


இந்நிலையில் மகளிர் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்கமாக இந்தியாவில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் தொடர் அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை மகளிர் உள்நாட்டு தொடர்கள் அனைத்தும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதன்காரணமாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று கருதப்படுகிறது. 


 






நீண்ட நாட்களாக எழுந்த கோரிக்கைக்கு பிறகு பிசிசிஐ மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 6 அணிகள் வரை பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 2018ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 சேலஞ்ச் என்ற பெயரில் இரண்டு அணிகளுடன் தொடங்கிய தொடர் 3 அணிகளுடன் தற்போது நடைபெற்று வருகிறது. 2020ஆம் ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக இந்தத் தொடர் நடத்தப்படவில்லை. 


இந்தச் சூழலில் இந்தாண்டு மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அப்போது நடைபெறவில்லை. 2020ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. அதன்பிறகு மகளிர் ஐபிஎல் தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அப்போது அது வெளியாகவில்லை. 


தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியிடம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடர் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


இந்த சமயத்தில் மகளிர் ஐபிஎல் நடத்த ஏதுவாக பிசிசிஐ ஒரு நகர்த்தலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடவர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் சிலர் மகளிர் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் நடைபெறும் பட்சத்தில் அது 6 அணிகள் கொண்ட தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண