அணிக்கு மூன்றுபேர் கொண்ட ( 3X3 ) கூடைப்பந்து தேசிய சீனியர் போட்டிகள் சென்னையில் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த தொடரில் அணிக்கு 3 வீரர்கள் இடம் பெறுவார்கள் என்றும்,  கூடைப்பந்து விளையாட்டின் பிரத்யேக மைதானத்தில் விளையாடப்படும் இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து ரயில்வே அணி உட்பட 30 மாநில ஆடவர் அணிகளும், 25 மாநில பெண்கள் அணியினரும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.  


மேலும், இந்த தொடரில் முதல் 7 இடங்கள் பிடிக்கும் அணிகள் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி கோவாவில் நடைபெறும் 37-வது தேசிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்று தெரிவித்தார். 


மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதன் படி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


மேலும்  24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளை இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்துடன் இணைந்து ஒருங்கிணைத்துள்ளது என்று கூறிய அவர் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு போதிய கட்டமைப்புகளை உருவாக்கியும், அகாடமிகளை உருவாக்கி வீரர்களை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் என்றும் கிராமங்கள் முதல் அனைத்து இடங்களிலும் 3*3 போட்டிக்கான வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் கூறினார். 






நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த கூடைப்பந்து போட்டி நடைபெறுவதால், இதற்கான ஏற்பாடுகளும் பாதுகாப்பு பணிகளும் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் இந்த தொடர் நடைபெறுவதால், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. 


ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு மற்றும் பெண்கள் - ரயில்வேஸ் வரவிருக்கும் தேசிய சாம்பியன்ஷிப்பில் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளன. சீனியர் 3×3 தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2023 இன் முந்தைய பதிப்பில், தமிழ்நாடு ஆண்கள் அணி ரயில்வேயை (22-20) தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்தது. பெண்கள் பிரிவில் ரயில்வே அணி டெல்லியை (21-12) வீழ்த்தி சாம்பியன் ஆனது. இம்முறை, தமிழ்நாடு ஆண்கள் அணி சொந்த மண்ணில் களமிறங்குவதால், தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இருப்பினும், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் போன்ற அணிகள் நல்ல வலிமையான வீரர்களைக் கொண்டிருப்பதால் அவற்றை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என கூடைப்பந்து ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.