பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான சோயிப் மாலிக் நீண்ட நாட்களாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி 41 வயதை எட்டிய சோயிப் மாலிக், தற்போதுவரை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்தநிலையில், பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மாலிக், நேற்று டாக்கா டோமினேட்டர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். இந்த போட்டியில் களமிறங்கியதன்மூலம், அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி, டி20 களில் 500 போட்டிகளில் பங்கேற்ற மூன்றாவது வீரரும், ஆசியாவில் முதல் வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார். மேலும், 400க்கும் மேற்பட்ட லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய ஸ்டேடியத்தில் நேற்று டாக்கா டோமினேட்டர்ஸ் அணியும், ரங்பூர் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. அப்போது, மாலிக் பீல்டிங் செய்ய மைதானத்திற்குள் வந்தபோது இரு அணி வீரர்களும் இருபுறமும் அணிவகுத்து கைதட்டி அவரை வரவேற்றனர்.
இந்தப் போட்டியில் மாலிக் ஒரு சிக்ஸர் அடித்து 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். எனினும், 131 ரன்கள் இலக்கை அவரது அணி வெற்றிகரமாக துரத்தி வெற்றி பெற்றது.
சோயிப் மாலிக்:
சோயிப் மாலிக் இதுவரை 500 டி20 போட்டிகளில் விளையாடி 12287 ரன்கள் எடுத்துள்ளார். டுவைன் பிராவோ (556 போட்டிகள்) மற்றும் கெய்ரன் பொல்லார்டு ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கெய்ரன் பொல்லார்ட் பெற்றுள்ளார். இவர் இதுவரை 614 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
500 டி20 போட்டிகளில் 464 இன்னிங்ஸ்களில் 12,287 ரன்கள் குவித்து டி20 பார்மேட்டில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, சோயப் மாலிக் இதுவரை 266 இன்னிங்ஸில் 162 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்காக அதிகபட்சமாக 124 டி20 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த மாலிக், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 41 வயதான அவர் இன்னும் பாகிஸ்தானின் டி20 அணியில் மீண்டும் இடம் பெறலாம் என்ற நம்பிக்கையில் ஓய்வு பெறாமல் இருக்கிறார்.