டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.
கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும். கடந்த ஆண்டு இந்த பாக்சிங் டே போட்டியின்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்சிங் டெஸ்ட் என்றால் என்ன? அந்த பெயர் வர காரணம் என்ன?
உலகம் முழுவதும் அதிக நபர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று. இந்தப் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ஒருவருக்கொருவர் அன்பை பரிசுகள் மூலம் பரிமாறி கொள்வார்கள். அதற்கேற்ப இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறிய பெட்டிகள் (பாக்ஸ்) வைக்கப்படுவது வழக்கம். அதில் ஊழியர்கள் மற்றும் சில ஏழைகளுக்கு மக்களுக்கு சிலர் பரிசை போடுவார்கள். இந்த பாக்ஸை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி திறந்து பரிசை எடுத்து தருவார்கள். அந்த பாக்ஸை திறக்கும் நாளன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பாக்சிங் டே விளையாட்டு போட்டிகள் என்று அழைக்கப்படும்.
பாக்சிங் டே டெஸ்ட்:
இந்த பாக்சிங் டே நாளில் முதன் முதலில் 1856ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் அணி உள்ளூர் போட்டியில் பங்கேற்றது. இந்தப் போட்டி மிகவும் பிரபலம் அடைந்தது. அதன்பின்னர் 1865ஆம் ஆண்டு முதல் இதை ஒவ்வொரு ஆண்டும் விளையாட நியூ சவுத் வேல்ஸ் அணி முடிவு செய்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டேவில் அந்த அணி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது.
1950ஆம் ஆண்டு முதல் சர்வதேச பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்றது. முதல் பாக்சிங்டே டெஸ்டில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மெல்பேர்னில் மோதின. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 1980ஆம் ஆண்டு முதல் அந்தப் போட்டி மெல்பேர்னில் நடைபெற தொடங்கியது. ஆஸ்திரேலியாவை போல் தென்னாப்பிரிக்காவிலும் 1992ஆம் ஆண்டு முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஹெட் டூ ஹெட்:
மெல்போர்ன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 12 டெஸ்ட்களில் விளையாடி 3 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டியை டிராவும் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா வீரர் வார்னருக்கு 100வது போட்டி:
36 வயதான ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு இது 100 வது டெஸ்ட் போட்டியாகும். இந்த சிறப்புமிக்க மைக்கல்லை எட்டும் 14வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பேட்டிங் செய்ய தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 24 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களுடன் தடுமாறி வருகிறது.