India Vs Australia Cricket: டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது தொடர்பாக, இணையத்தில் ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


ஆஃப்கானிஸ்தான் வெற்றி - ஆஸ்த்ரேலியா அவுட்:


ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் சூப்பர் 8 சுற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி லீக் போட்டியின் முடிவைச் சார்ந்து, மூன்று அணிகளின் அரையிறுதி கனவு இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால், அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை, முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இழந்து உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இதனை இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


இந்தியா  Vs ஆஸ்திரேலியா


ஆஃப்கானிஸ்தான் வெற்றியை அந்நாட்டு ரசிகர்களை காட்டிலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருகின்றனர். காரணம், அவர்களின் வெற்றி ஆஸ்திரேலிய அணியை போட்டியிலிருந்தே வெளியேற்றியது தான். ஒருவேளை அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தால், இந்திய அணி அவர்களை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், கடந்த காலங்களில் ஐசிசி தொடர்களில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவுகள், நம்மூர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. உதாரணமாக அண்மையில் நடந்து முடிந்த ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றின் இறுதிப் போட்டிகளில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சூப்பர் 8 சுற்றில் அந்த அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரிலிருந்தே வெளியேற்றியுள்ளது.


பேசியே வெறுப்பேற்றிய ஆஸ்திரேலியா:


ஆஸ்திரேலிய வீரர்களின் பேச்சும் இந்திய ரசிகர்களை கொதிப்படையச் செய்தது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எதுவாக இருக்கும் என, ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் கம்மின்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெறும், மற்ற மூன்று அணிகள் குறித்து எங்களுக்கு கவலையில்லை” என பதிலளித்தார்.


இந்திய அணி உடனான போட்டி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், “அடுத்த போட்டியில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதற்கு இந்தியாவை விட வேறு சரியான அணி எதுவும் இருக்காது” என பேசினார். இப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கருத்துகள், இந்திய அணி ரசிகர்களை எதிர்மறையாக தூண்டிவிட்டது.


உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்:


இந்நிலையில் தான், இந்தியா உடனான தோல்வியால் சுயமாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, ஆஃப்கானிஸ்தானின் தோல்வியை ஆஸ்திரேலியா எதிர்பார்த்து இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பும் பறிபோனது. இதனை இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி சொந்த ஊருக்குச் செல்ல தகுதி பெற்று விட்டது என்பது போன்ற பல மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.