ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 இன் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.


ஆசிய விளையாட்டு 2023 இல் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியை எட்டியுள்ளது. இன்று (அக்டோபர் 3) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இவர் 48 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து இந்திய அணிக்கு 200 ரன்களை கடக்க உதவியாக இருந்தார். 


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி வலுவான தொடக்கத்தை கொடுக்க யஷஸ்வி மற்றும் ருதுராஜ் இடையே 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இங்கு ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து திலக் வர்மா (2), விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா (5) ஆகியோரை இந்தியா விரைவில் இழந்தது. இருப்பினும், மறுமுனையில் அடுத்ததாக களமிறங்கிய சிவம் துபே 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 25 ரன்களுடனும், ரிங்கு சிங் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. 


நேபாள அணி சார்பில் அதிகபட்சமாக  தீபேந்திர சிங் 2 விக்கெட்களும், சோம்பல் மற்றும் லமிச்சேனே 1 தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர். 


சற்று கடினமான இலக்கு: 


203 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்குடன் நேபாள அணி களமிறங்கியது.  நேபாள அணி தொடக்க ஜோடி சிறப்பான தொடக்கத்தை அந்த அணிக்கு அளித்தது. முதல் விக்கெட்டுக்கு குஷால் புர்தல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி 29 ரன்கள் சேர்த்தது. 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆசிப் ஆட்டமிழந்தார். புர்தல் 28 ரன்களில் இன்னிங்ஸ் ஆடினார். மூன்றாவது இடத்தில் வந்த குஷால் மாலாவும் 29 ரன்கள் எடுத்தார். அப்போது, நேபாளத்தின் ரன்-ரேட் 7 ஆக இருந்தது. டாப்-3 பேர் பெவிலியன் திரும்பிய பிறகு, கேப்டன் ரோகித் பவுடலும் (3) விரைவில் பெவிலியன் திரும்பினார். இதன் போது நேபாளத்தின் ஸ்கோர் 11 ஓவர்களில் 77/4 ஆக மோசமான நிலையை அடைந்தது. 






இங்கிருந்து, தீபேந்திரா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார், சந்தீப் 12 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நேபாளத்திற்கு அவிட்டாக. கரனும் லோயர் ஆர்டரில் 18 ரன்களை எடுத்தார். இருப்பினும், இந்த மூவரின் இன்னிங்ஸ் நேபாளத்திற்கு வெற்றியை கொடுக்க முடியவில்லை. இறுதியில் நேபாள அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.