Asian Athletics Championships 2023: ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் 2023இல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் நடந்து வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழா ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் மூன்றாவது நாளான இன்று அதாவது ஜூலை 14ஆம் தேதி, நடைபெற்ற மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய வீராங்கனை சைலி சிங், 6.54 மீட்டர் நீளம் தாண்டியதால் அனைவதுரது மத்தியிலும் இவருக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இவருக்குப் பின்னர் நீளம் தாண்டிய ஜப்பானின் ஹடா சுமீரி 6.97 மீட்டர் அளவிற்கான நீளம் தாண்டி முதல் இடம் பெற்றதுடன் தங்கப்பதக்கத்தையும் ஜப்பான் வசமாக்கினார். இதனால், இந்தியாவின் சைலி சிங்கிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சீனாவின் ஜியாவை சோங் 6.46 மீட்டர் நீளத்தை எட்டி மூன்றாவது இடம் பிடித்தார்.
அதேபோல், பாங்காக்கில் நடந்துவரும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளில், தஜிந்தர் டூர் தனது ஷாட் புட் பட்டத்தை தக்கவைத்து ஆசிய சுற்றுகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார். குண்டை வீசி எறிந்த பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டதால், முடிவுகள் வெளியிடப்படும் வரை அவரால் அங்கு இருக்க முடியாது எனும் அளவிற்கு காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால், அவர் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார். அவரது உடல் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பாருல் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தரவரிசை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஜப்பான் | 7 | 8 | 3 | 18 |
2 | சீனா | 3 | 3 | 1 | 7 |
3 | இந்தியா | 3 | 0 | 3 | 6 |
4 | கஜகஸ்தான் | 1 | 2 | 0 | 3 |
5 | தாய்லாந்து | 1 | 1 | 1 | 3 |
6 | இலங்கை | 1 | 0 | 2 | 3 |
7 | உஸ்பெகிஸ்தான் | 0 | 2 | 1 | 3 |
8 | கொரியா | 0 | 0 | 2 | 2 |
9 | வியட்நாம் | 0 | 0 | 1 | 1 |
9 | சவூதி அரேபியா | 0 | 0 | 1 | 1 |
9 | மங்கோலியா | 0 | 0 | 1 | 1 |