உலக கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எப்படி முக்கியமானதாக பார்க்கப்படுகிறதோ, அதேபோல் ஆசியாவில் ஆசியக் கோப்பை மிக முக்கியமானதாக உள்ளது. ஆசியக் கோப்பை போட்டியின் முதல் பதிப்பு கடந்த 1984ம் ஆண்டு நடந்தது. 40 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை 3 அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதில், சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி பங்குபற்றிய சாதனையை பற்றி இங்கு பார்ப்போம்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரை ஆசிய கோப்பை வரலாற்றில் மொத்தம் 14 பதிப்புகளில் விளையாடி, அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் முறையாக இறுதிப் போட்டியில் இலங்கையை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது.


இரண்டாவது முறையாக ஆசிய கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணி 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2012ம் ஆண்டு இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், ஆசிய கோப்பையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது. ஆசிய கோப்பையை இந்தியா அதிகபட்சமாக 7 முறையும், இலங்கை 6 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.


ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோதல்:


இதுவரை, ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மொத்தம் 17 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 50 ஓவர் ஃபார்மேட் மற்றும் டி20 பார்மட் இரண்டும் அடங்கும். இந்தியா 9 போட்டிகளிலும், பாகிஸ்தான் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரம் ஆசியக் கிண்ண வரலாற்றில் இரு அணிகளுக்குமிடையிலான போட்டிகள் இலங்கையில் மண்ணில் மூன்று முறை மோதியுள்ளன. இதில் இந்தியாவும், ஒரு பாகிஸ்தானும் தலா வெற்றி பெற்ற நிலையில், 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.


ஆசிய கோப்பை 2023:


ஆசியக் கோப்பை 2023 போட்டியின் வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியானது இலங்கையில் உள்ள பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் இடையே பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடைபெறுகிறது.


வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. பெரும்பாலான போட்டிகளை இலங்கை நடத்துகிறது. இந்திய அணி லீக் சுற்றில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் இது மூன்றாவது மோதலாக அமையும். போட்டியின் இறுதிப் போட்டியும் இலங்கையில் நடைபெறவுள்ளது.