2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் தொடங்கி தற்போது இலங்கையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆசியக் கோப்பை போட்டியை பொறுத்தவரை அனைத்திலும் முன்னோடியாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது.
ஆசியக் கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து, இந்தியாவுடன் மோதியது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டியானது. அடுத்ததாக, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அனைத்திலும் ஆதிக்கம்:
ஆசியக் கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதலிடத்தில் இருந்து வருகின்றனர். அந்த அணியின் வீரர்களும் ரன் குவிப்பதில் முதலிடத்தில் உள்ளனர்.
2023 ஆசிய கோப்பையில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஹாரிஸ் ரவூப். இவர் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ரவூப் 20 ஓவர்கள் வீசி 93 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். இந்த பட்டியலில், பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர் நசீம் ஷா இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை இவர் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், நசீம் 19.3 ஓவர்களில் 117 ரன்கள் கொடுத்துள்ளார். ஷாஹீன் அப்ரிடி மூன்றாவது இடத்தில் உள்ளார். அப்ரிடி 22 ஓவர்கள் வீசி 104 ரன்கள் கொடுத்தார். இதனுடன் சேர்த்து 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்கள் இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
அதிக ரன்கள்:
அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலைப் பார்த்தால், வங்கதேசத்தின் நஸ்முல் சாண்டோ முதலிடத்தில் உள்ளார். 2 போட்டிகளில் 193 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பாபர் 3 போட்டிகளில் 168 ரன்கள் எடுத்துள்ளார். பாபரை தொடர்ந்து, மெஹ்தி ஹசன் 3 போட்டிகளில் 117 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 87 ரன்களுடனும் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 85 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
ஆசிய கோப்பை 2023 முதல் சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 193 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. போட்டி முழுவதும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியின் வீரர்கள் தற்போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், அதிக ரன்கள் குவிப்பதிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர்.