ஆசியகோப்பைத் தொடரில் இலங்கை – இந்தியா மோதிய இறுதிப்போட்டி வெறும் 1.30 மணி நேரத்தில் நடந்து முடிந்தது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும், இலங்கை ரசிகர்களுக்கு மிகுந்த சோகமாகவும் அமைந்தது. இந்த போட்டியில் இலங்கையை வெறும் 50 ரன்களுக்கு சுருட்டி இந்தியா பந்துவீச்சில் மிரட்டியது. இதையடுத்து, 51 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 6.1 ஓவர்களிலே எட்டி 8வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


தொடக்கம் மோசம்:


இந்த தொடர் தொடங்கியபோது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முக்கிய அணிகளாக கருதப்பட்டது. இவற்றில் முதல் மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணியே கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டது. இந்த தொடர் தொடங்கும் முன் ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் 1 என்ற அணி என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெல்லும் என்று பலரும் கருதினர்.




பந்துவீச்சில் மிரட்டிய அவர்களை எதிர்த்து இந்திய அணி ஆடிய முதல் லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித், சுப்மன்கில், விராட்கோலி மிகவும் மோசமாக ஆடியதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் அந்த போட்டி மழையால் ரத்தானதே சந்தோஷம் என்றுதான் எண்ணியிருப்பார்கள். ஏனென்றால், ஆசியகோப்பைத் தொடக்கப் போட்டியில் நேபாளத்தை பாகிஸ்தான் துவம்சம் செய்திருந்தது.


சூப்பர் 4 அசத்தல்:


இதையடுத்து, நேபாளத்தை வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு மிக மிக மோசமாக இருந்தது. பும்ரா இல்லாத அந்த போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆடிய நேபாள அணி முதல் விக்கெட்டிற்கே 65 ரன்களை சேர்த்தது. ஷமி, சிராஜ், பாண்ட்யா, ஷர்துல், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் பந்துவீச்சை சமாளித்து நேபாள அணி 230 ரன்களை எடுத்தது.


அப்போதும் இந்திய பந்துவீச்சை பார்த்த ரசிகர்கள் நேபாளமே இந்திய பந்துவீச்சை சிதைக்கிறது என்றால், பாகிஸ்தானிடம் ஆடியிருந்தால் எந்தளவு சிதைத்திருப்பார்கள்? என்றே ரசிகர்களை எண்ண வைத்தது. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால்,  சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற பிறகு இந்தியாவின் ஆட்டமே வேறு ரகமாக மாறியிருந்தது.


பேட்டிங், பந்துவீச்சு அசத்தல்:


பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 முதல் ஆட்டத்தில் ரோகித், சுப்மன்கில் அரைசதம் விளாச கோலி, கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினர். அந்த போட்டியில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அடுத்து இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இறுதிப்போட்டிக்கு எளிதாக முன்னேறியது. அந்த போட்டியில் குல்தீப் சுழலில் அசத்தினார்.




சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டியில் மட்டும் முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆடிய இந்தியா தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் வேகத்தில் மிரட்டிய இந்தியாவை எதிர்கொள்ளவே முடியாமல் இலங்கை நொறுங்கியது. முகமது சிராஜின் ருத்ரதாண்டவ பந்துவீச்சால் இலங்கை வெறும் 50 ரன்களுக்கு நொறுங்கிப் போனது.


உலகக்கோப்பைத் தொடர்:


இந்த ஆசியக்கோப்பைத் தொடரை பொறுத்தவரை இந்திய அணி சொதப்பலாக தொடங்கி அசத்தலாக முடித்துள்ளது என்றே கூற வேண்டும். லீக் போட்டியில் இந்தியா ஆடிய விதம் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தினாலும், சூப்பர் 4 சுற்றில் அசத்தலாக ஆடியது. குறிப்பாக, இந்தியாவின் பந்துவீச்சு மிரட்டலாக மாறியுள்ளது. வேகம், சுழல் என்று உலகக்கோப்பை சுற்றுக்கு தயார் ஆகும் விதமாக இந்தியாவின் பந்துவீச்சு தரமானதாக மாறியுள்ளது.




பும்ரா, முகமது சிராஜ், ஷமி ஆகியோருடன் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூரும் வேகத்தில் அசத்தி வருகின்றனர். இவர்களுடன் சுழலில் ஜடேஜா, குல்தீப், அக்‌ஷர் படேலும் அசத்தலாக பந்துவீச தயாராக உள்ளனர். இதே சிறப்பான பார்மில் இந்திய வீரர்கள் செயல்பட்டால் நிச்சயம் இனி வரும் பெரிய தொடர்களில் வெற்றிகளை வசப்படுத்த முடியும் என்பது உறுதியாகும்.