உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது குறித்து தமிழக வீரர் அஸ்வின் விரிவாக பேசியுள்ளார்.


இந்திய அணி படுதோல்வி:


லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால், இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்கள் என்பது தோல்விக்கு பிறகு அல்ல, முதல் நாள் வெளியான பிளேயிங் லெவன் பட்டியலில் அஸ்வினின் பெயர் இல்லாதபோதிலிருந்தே தொடங்கி விட்டது. ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என பலரும், இந்திய அணியின் முடிவை விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இதுதொடர்பாக அஸ்வின் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.


மவுனம் கலைத்த அஸ்வின்:


இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது குறித்து தமிழக வீரர் அஸ்வின் விரிவாக பேசியுள்ளார். அப்போது, சூழற்பந்துவீச்சு மட்டுமின்றி மற்ற திறன்களையும் வளர்த்துகொண்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஸ்வின் “பதிலளிப்பதற்கு இது கடினமான கேள்வி அல்லவா?, ஏனென்றால் நாம் இப்போது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முடித்துள்ளோம். இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான பங்களிப்பை நான் கொடுத்து இருக்கிறேன், எனவே அந்த இறுதிப்போட்டியில் விளையாட நான் விரும்பினேன். கடைசியாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கூட நான் நன்றாக பந்துவீசினேன், நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன்.


வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டேன் - அஸ்வின்:


கடந்த 2018-19ம் ஆண்டுகளில் இருந்து வெளிநாட்டு மண்னில் நான் சிறப்பாக பந்துவீசி வருகிறேன். அணிக்காக போட்டிகளை வென்று கொடுத்து இருக்கிறேன். உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பிளேயிங் லெவனில் தான் இல்லாததை, ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தரப்பில் இருந்து பார்க்கிறேன். கடந்தமுறை இங்கிலாந்தில் விளையாடியபோது டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதன் காரணமாக 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் தான் சரியான கலவை என அவர்கள் நினைத்து இருக்கலாம். 


வாய்ப்புகள் கிடைக்கவில்லை:


போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு தகுதியானவனாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் விஷயம் என்னவென்றால் விளையாடுவதற்கான அல்லது கோப்பைகளை வெல்வதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே, பிளேயிங் லெவனில் எனது பெயர் இல்லை என எனக்கு தெரிய வந்தது என அஸ்வின் பதிலளித்தார்.  டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளராகவும், நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கூட 26 இன்னிங்ஸ்களில் களமிறங்கி, 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அப்படி இருந்தும், அவர் இறுதிப்போட்டியில் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.