உலக கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் இம்முறை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருடன், உலக டெஸ்ய் சாம்பியன்ஷிப் 2023-25 மூன்றாவது பதிப்பும் தொடங்குகிறது. 


இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி லண்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரானது இங்கிலாந்துக்கு அதன் சொந்த மண்ணில் மிகப்பெரிய சோதனையாக இருக்கும். இங்கிலாந்து அணி கடந்த ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்று இதுவரை கையாண்ட வியூகம் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டை திரும்ப பார்க்க செய்தது. 


இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பேற்ற பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் போட்டி முறை முற்றிலும் தலைகீழாக மாறியது. அந்த அணி 13 டெஸ்ட் போட்டிகளில் 11ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இப்போது இந்த பேஸ்பால் உத்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேலை செய்யுமா என்பதுதான் கேள்விகுறியாக உள்ளது. 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை அற்புதமான முறையில் தொடங்கியது.


அதே நேரத்தில், இந்த பேஸ்பால் வியூகம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாவும் இங்கிலாந்து அணியை கிண்டல் செய்துள்ளார். பேஸ்பால் வியூகம் குறித்து ஒரு பெரிய கேள்வி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு வேறு எதுவும் B திட்டம் உள்ளதா..? பேஸ்பால் வியூகத்தை தவிர அவர்களுக்கு வேறு திட்டம் இல்லை என்றால் அது வேலை செய்யாது என தெரிவித்தார். 






பேஸ்பால் வியூகம் என்றால் என்ன..? 


இங்கிலாந்து அணி புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் கீழ் டி20 முறையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் ஓவருக்கு சராசரியாக 4.85 ரன்கள் எடுத்து எதிரணியை திணற செய்தனர். பென் ஸ்டோக்ஸ் தலைமையின்கீழ் இங்கிலாந்து டெஸ்ட் அணி இதுவரை  13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 11ல் வெற்றி பெற்றுள்ளது.