காமன்வெல்த் போட்டிகளில் இன்று பளுதூக்குதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான மீராபாய் சானு பங்கேற்றுள்ளார். நடப்புச் சாம்பியனான இவர் இம்முறையும் தன்னுடைய தங்கப்பதக்கத்தை தக்க வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 


 


இந்நிலையில் முதலில் நடைபெற்ற ஸ்நாட்ச் பிரிவில் மீராபாய் சானு முதல் முயற்சியில் 84 கிலோ எடையை தூக்கினார். அடுத்து தன்னுடைய இரண்டாவது முயற்சியில் சானு 88 கிலோ எடையை அசத்தலாக தூக்கினார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளில் 49 கிலோ எடைப்பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் சாதனைப் படைத்தார். தன்னுடைய மூன்றாவது வாய்ப்பில் இவர் 90 கிலோ எடையை தூக்க முற்பட்டார். எனினும் அவரால் சரியாக தூக்க முடியவில்லை. 


 






இதைத் தொடர்ந்து கிளின் அண்டு ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் தன்னுடைய முதல் முயற்சியில் மீராபாய் சானு 109 கிலோ எடையை தூக்கினார். தன்னுடைய இரண்டாவது முயற்சியில் அவர் 113 கிலோ எடையை தூக்கினார். மூன்றாவது முயற்சியில் 115 கிலோ எடையை தூக்க முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தார். இருப்பினும் மொத்தமாக ஸ்நாட்ச் மற்றும் கிளின் அண்டு ஜெர்க் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 201 கிலோ எடையை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை படைத்தார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 


முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவர் 55 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சன்கித் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அதன்பின்னர் ஆடவர் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் இன்று ஒரே நாளில் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. தற்போது வரை இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண