காமன்வெல்த் போட்டிகளில் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷால் அரையிறுதி போட்டியில் நேற்று நியூசிலாந்து வீரரிடம் தோல்வி அடைந்தார். இதன்காரணமாக அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சவுரவ் கோஷால் ஜேம்ஸ் வில்ஸ்டராப்பை எதிர்த்து விளையடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை இந்திய வீரர் சவுரவ் கோஷால் 11-6 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமிலும் சவுரவ் கோஷால் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்விளைவாக இரண்டாவது கேமை 11-1 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 2-0 என முன்னிலை பெற்றார். மூன்றாவது கேமை வென்றால் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுவிடலாம் என்பதால் அந்த கேமில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
மூன்றாவது கேமில் சவுரவ் கோஷால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் மூன்றாவது கேமை 11-4 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 11-6,11-1,11-4 என்ற கணக்கில் சவுரவ் கோஷால் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் சவுரவ் கோஷால் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் உடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அதைத் தொடர்ந்து நடப்பு காமன்வெல்த் போட்டியில் இவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
முன்னதாக இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா-ஹரிந்தர் பால் சந்து இணை பங்கேற்றது. முதல் சுற்றில் இந்திய ஜோடி இலங்கையின் யெஹேனி- ரவிந்து ஸ்ரீ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமை இலங்கை ஜோடி 11-8 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய இந்திய ஜோடி 11-4,11- 4 என்ற கணக்கில் அடுத்த இரண்டு கேம்களையும் வென்றது. அத்துடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்