காமன்வெல்த் போட்டிகளில் இன்று முதல் தடகள போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் முதலில் ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டிகள் நடைபெற்றன. நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் முகமது அனீஸ் யஹியா ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் 8 மீட்டரை தாண்டி குதித்தால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அப்படி இல்லையென்றால் தகுதிச் சுற்றில் முதல் 12 இடங்களை பிடிக்கும் நபர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.
இந்நிலையில் தகுதிச் சுற்றில் முரளி ஸ்ரீசங்கர் தன்னுடைய முதல் வாய்ப்பில் 8.05 மீட்டர் தூரம் தாண்டி அசத்தினார். அத்துடன் முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தினார். மற்றொரு இந்திய வீரரான முகமது அனீஸ் யஹியா தன்னுடைய முதல் வாய்ப்பில் 7.46 மீட்டர் தூரம் தாண்டினார். அடுத்து அவருடைய இரண்டாவது வாய்ப்பில் 7.68 மீட்டர் தூரம் தாண்டினார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 7.49 மீட்டர் தூரம் தாண்டினார்.
மொத்தமாக தகுதிச் சுற்றின் இரண்டு பிரிவுகளிலும் 8 மீட்டரை தாண்டாமல் இருந்தால் முதல் 12 இடங்களுக்கும் வரும் பட்சத்தில் அந்த வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடுவார்கள். அந்தவகையில் இந்திய வீரர் முகமது அனீஸ் யஹியா 8வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நீளம் தாண்டுதலில் இந்தியா சார்பில் பங்கேற்ற இரண்டு வீரர்களும் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். அடுத்ததாக இன்று நடைபெறும் மகளிர் குண்டு எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் மன்பரீத் கவுர் பங்கேற்க உள்ளார். இவருடைய தகுதிச் சுற்று போட்டிகள் 3.30 மணிக்கு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்