காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா அசத்தி வருகிறது. அந்தவகையில் நேற்று நள்ளிரவு ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அச்சிந்தா ஷெயுலி பங்கேற்றார். இவர் ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 137 கிலோ எடையை தூக்கினார். அடுத்த முயற்சியில் 140 கிலோ எடையை தூக்கினார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் 143 கிலோ எடையை தூக்கி ஸ்நாட்ச் பிரிவில் சாதனைப் படைத்தார். 


அதன்பின்னர் நடைபெற்ற கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அச்சிந்தா தன்னுடைய முதல் முயற்சியில் 166 கிலோ எடையை தூக்கினார். அடுத்து இரண்டாவது முயற்சியில் 170 கிலோ எடையை தூக்காமல் விட்டார். இருப்பினும் தன்னுடைய 3வது முயற்சியில் இவர் 170 கிலோ எடையை தூக்கி அசத்தினார். இதன்மூலம் ஸ்நாட்ச் பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ எடையையும், கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ என மொத்தமாக 313 கிலோ எடையை தூக்கினார். அத்துடன் புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்தார். மேலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.


 






மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியைச் சேர்ந்தவர் அச்சிந்தா ஷெயுலி. இவருடைய தந்தை ரிக்‌ஷா இழுப்பவராக இருந்து வந்தார். இவருக்கு 12 வயது இருந்தப் போது இவருடைய தந்தை உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய தாயுடன் சேர்ந்து இவர் டெய்லர் வேலையை செய்துள்ளார். அதன்பின்னர் இவருக்கு பளுதூக்குதலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பளுதூக்குதலில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அதன்பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார். 


2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தச் சூழலில் 20 வயதில் தற்போது சாதனையுடன் காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அத்துடன் ஸ்நாட்ச் பிரிவில் சாதனையையும் இவர் படைத்துள்ளார். 20 வயதில் இந்தச் சிறப்பான சாதனையை படைத்து அசத்தியுள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இது இந்தியாவிற்கு 6வது பதக்கமாக அமைந்துள்ளது. இந்தியா தற்போது வரை 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண