பிரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஈகா ஸ்வியாடெக்குடனான போட்டியின் போது, சீன வீராங்கனை ஷெங்க் கின்வென் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அது தன்னுடைய நம்பிக்கையை உடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், `நான் ஆணாக பிறந்திருக்க வேண்டும் என உணர்கிறேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 19 வயதான டென்னிஸ் வீராங்கனை ஷெங்க் கின்வென் தன் முதல் பிரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். சர்வதேச அளவில் 74வது இடத்தைப் பிடித்துள்ள ஷெங்க், இரண்டாவது ஆட்டத்தின் போது மருத்துவ காரணங்களுக்காக டைம் அவுட் கோரியுள்ளார். அவரது வலது காலில் காயம் ஏற்பட்டிருப்பது ஏதேனும் பாதிப்பை உருவாக்கியதா எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது, தன் மாதவிடாய் நேரத்தைச் சுட்டிக் காட்டி பேசிய ஷெங்க், `இது பெண்களின் விவகாரம்.. முதல் நாள் எப்போதும் கடுமையானது. நான் விளையாடவும் வேண்டும் என்பதால் முதல் நாளின் போது கூடுதல் வலி இருக்கும். என்னால் எனது இயற்கை இயல்பிற்கு எதிராக இயங்க முடியாது.. இது கடினமானதாக இருக்கிறது. நானும் ஆணாகப் பிறந்திருந்தால் இதனை எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.
இந்தப் போட்டி தொடங்கிய போது, ஷெங்க் 5 பாயிண்ட்களை வென்றுள்ளார். மேலும், கடந்த ஏப்ரல் 23க்குப் பிறகு, முதல் முறையாக நடப்பு உலக சாம்பியன் ஈகா ஸ்வியாடெக் பின்னடைவைச் சந்தித்தது ஷெங்கிற்கு எதிரான இந்தப் போட்டியில்தான்.
2020ஆம் ஆண்டு பிரென்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியனான ஈகா ஸ்வியாடெக் தோல்வியை நினைத்து அச்சத்தில் இருந்த போது, ஷெங்க் மருத்துவ காரணங்களுக்காக நேர இடைவேளை கோரியுள்ளார். 2018ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற சிமோனா ஹேலெப்பைத் தன் வலது கால் முழுவதும் காயத்திற்கான கட்டுகளுடன் வென்றுள்ளார் ஷெங்க்.
போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் ஷெங்க் பேசிய போது, `என் கால் இந்தப் போட்டியைக் கடினமானதாக மாற்றியது.. ஆனால் வயிற்று வலியோடு ஒப்பிடுகையில் கால் வலி சற்றே எளிதாகத் தோன்றியது. என் வயிறு அதிகமாக வலித்ததால் என்னால் டென்னிஸ் விளையாட முடியவில்லை. நான் வழக்கமாக என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.. ஆனால் தற்போது கடினமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.