செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் அணிக்கு இந்தியாவிற்கு இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளது. இந்திய அணியின் சி பிரிவில் விளையாடிய ஈஷா ஹர்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய வீராங்கனை ஈஷா ஹர்வாடே, ஹாங்காங் வீராங்கனை சிகப்பி கண்ணப்பனை வீழ்த்தினார். 


முன்னதாக, 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றுப்போட்டி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் சுற்றை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் 186 நாடுகளை சேர்ந்த அனைத்து அணிகளும் பங்கேற்றனர். 


ஓபன் சுற்றில் 96 போட்டிகளும், மகளிர் பிரிவில் 83 போட்டிகளும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் சுற்றை பொறுத்தவரை ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய A அணி  ஜிம்பாம்பே அணியை எதிர்கொண்டது. இதேபோல் இந்திய B அணி ஐக்கியஅரபு அமீரகம் அணியையும், C அணி தெற்கு சூடான் அணியையும் எதிர்கொண்டது. அதேசமயம் பெண்கள் பிரிவை பொறுத்தவரை இந்திய A அணி  தஜிகிஸ்தான் அணியையும், இந்திய B அணி வேல்ஸ் அணியையும், இந்திய C அணி - ஹாங்காங் அணியையும் போட்டியிட்டனர். 


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா :


மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டு சிறப்பான கலாச்சாரம், சிறப்பான அறிஞர்கள் மற்றும் உலகத்தின் பழமையான மொழியை கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் பந்தம் உள்ளது. அதன்காரணமாக இந்தியாவின் செஸ் பவர் ஹவுஸாக தமிழ்நாடு விளங்கி வருகிறது" எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று என்றும், 4 மாதங்களில் இந்த ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம் என்றும் கூறினார். மேலும்  இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.