44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமையான தொடக்க விழாவுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் செஸ் ஒலிம்பியாடில் ஆடவர் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிகா ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், “இந்தியாவிற்காக செஸ் விளையாட நான் தொடங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. என்னுடைய 13 வயது முதல் நான் இந்தியாவிற்காக செஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றேன். அத்துடன் தற்போது வரை 9 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். எப்போதும் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு எனக்கு இருந்து கொண்டு வந்தது.
தற்போது அந்த கனவு நிறைவுவேறியுள்ளது. அதுவும் நான் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது இந்த கனவு நிறைவேறியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது என்பது தெரிந்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் எப்படியாவது இதில் பங்கேற்க வேண்டும் என்று கருதினேன். என்னுடைய மருத்துவர்களும் எனக்கு வேறு எந்தவித மருத்துவ சிக்கல்கள் இல்லை என்றால் விளையாடலாம் என்று அறிவுறுத்தியிருந்தனர். இதன்காரணமாக நான் மிகவும் கவனமாக இருந்தேன்.
அத்துடன் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டேன். இதற்காக தினமும் கடினமாக உழைத்தேன். நிச்சயம் பதக்கம் வெல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இறுதியில் நான் பதக்கத்தை வென்றுவிட்டேன். இந்திய மகளிர் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் பதக்கம் என்பதால் மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்