உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் கடந்த 10 வருடங்களில் சந்திக்காத மோசமான தோல்வியை, ஸ்பெயினை சேர்ந்த இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் சந்தித்துள்ளார்.


நோவக் ஜோகோவிச்:


உலகில் கோடிக்காண ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் டென்னிஸும் ஒன்று. இதில் ஒவ்வொரு தசாப்தங்களிலும் ஒவ்வொரு வீரர்களின் பெயர்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும். அப்படி கடந்த இரண்டு தசாபதங்களில் டென்னிஸ் விளையாடாவிட்டாலும், அனைவராலும் அறியப்பட்ட இரண்டு பெயர்கள் ரோஜர் பெடரர், ரஃபேல் நடால். இந்த இரண்டு ஜாம்பவான்கள் டென்னிஸ் உலகையே கட்டி ஆண்டு கொண்டிருக்க, யாருமே எதிர்பாராதவிதமாக, டென்னிஸ் உலகில் பெரிதும் பிரபலமாகாதா செர்பியா எனும் நாட்டில் இருந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு நட்சத்திரம் தான் நோவக் ஜோகோவிச். சமகால ஜாம்பவன்களான பெடரர் மற்றும் நடாலையே வீழ்த்தி ஓரம்கட்டி, நி நான் தான் நம்பர் ஒன் என  தனக்கான வரலாற்றை செதுக்கி தற்போது டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்கிறார்.


எதிர்பாராத பரபரப்பான இறுதிப்போட்டி..!


டென்னிஸ் தொடர் என்றாலே இறுதிப்போட்டிக்கு நிச்சயம் ஜோகோவிச் வந்துவிடுவார், எதிராளிகள் யாராக இருந்தாலும் அடித்து துவைத்துவிட்டு கோப்பையை தனதாக்குவார், இதற்கு எதற்கு போட்டியை பார்ப்பது என ரசிகர்களே கருத தொடங்கினார். சமீப ஆண்டுகளில் அவர் செலுத்திய ஆதிக்கம் அத்தகையது. இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கைதேர்ந்த உலகின் சிறந்த ஆட்டக்காரரான நோவக் ஜோகோவிச்சை ஸ்பெயினை சேர்ந்த 20 வயதே ஆன கார்லோஸ் அல்காரஸ் எதிர்கொண்டார். எப்படியும் ஜோகோவிச் வெற்றி உறுதி என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கற்றுக்கொண்ட மொத்த வித்யையும் இறக்கி களத்தில் இருந்த ஜோகோவிச்சை மட்டுமின்றி மைதானத்தில் இருந்த ரசிகர்களையே விழி பிதுங்க வைத்தார் அல்காரஸ்.


வரலாற்று சிறப்புமிக்க வெற்றி:


ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் இடையே நேர்ந்த இந்த கடும் மோதலால், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஜோகோவிச் பங்கேற்ற ஒரு இறுதிப்போட்டி அவருக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. இதனால், போட்டியில் அனல் பறந்தது, இப்படி ஒரு போட்டியை டென்னிஸ் ரசிகர்கள் கண்டுகளித்து ஆண்டுகள் பல ஆகின என்பதே உண்மை. 20 வயது அல்காரஸ், 36 வயதான ஜோகோவிச் இடையேயான இந்த விம்பிள்டன் இறுதிப்போட்டி யுத்தம், 4 மணி நேரம் 43 நிமிட நீடிக்க கடும் போராட்டத்திற்கு பின் முடிவுக்கு வந்தது. தடுமாற்றம், நிலை தடுமாறி விழுந்தது, ஆக்ரோஷம், விதிகளை மீறியது, நடுவர்களின் எச்சரிக்கை, 26 நிமிடங்கள் நீடித்த 3வது செட் என பரபரப்புக்கு பஞ்சமே இன்றி, டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாததாக மாறிய இந்த  போட்டியில் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4  என்ற செட் கணக்கில், ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார் அல்காரஸ்.  இது அவர் வெல்லும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமும் ஆகும். ஆக்ரோஷத்தில் ஜோகோவிச் பொங்க, தான் நிகழ்த்திய அதிசயத்தை தன்னாலே நம்ப முடியாமல் களத்தில் சரிந்து ஆனந்த கண்ணீர் விட்டார் அல்காரஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான போட்டியை நிகழ்த்தி, தங்களுக்கு ஒரு மாபெரும் மறக்க முடியா அனுபவத்தை வழங்கிய வீரர்களுக்காக, ரசிகர்கள் எழுப்பிய கரவொலியால் மைதானமே அதிர்ந்தது.


10 வருடங்களில் இல்லாத தோல்வி..!


விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடரில் செண்டர் கோர்ட் களத்தில் நடைபெற்ற போட்டியில், கடந்த 10 ஆண்டுகளில் ஜோகோவிச் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். நடப்பாண்டில் ஆஸ்திரேலியா மற்றும் பிரெஞ்சு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருந்த ஜோகோவிச், ஹாட்ரிக் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதிகமுறை விம்பிள்டன் தொடரை வென்ற ஃபெடரரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பையும் ஜோகோவிச் இழந்தார். கடைசியாக அவர் விளையாடிய 14 கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப்போட்டியில்  ஜோகோவிச் சந்திக்கும் 3 தோல்வி இதுவாகும். முன்னதாக இவர் 2021ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மெத்வதேவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற பிறகு, தற்போது தான் அவர் இறுதிப்போட்டியில் தோல்வியையே சந்தித்துள்ளார். கடந்த 4 விம்பிள்டன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று வந்த ஜோகோவிச், தொடர்ந்து 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.  அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு (35) முன்னேறியவர், அதிகமுறை ஆடவர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை (23) வென்றவர் என ஜோகோவிச் படைத்துள்ள சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 


அல்காரஸிற்கு கிடைத்த அங்கீகாரம்..!


இந்த நிலையில் அவர் கண்டுள்ள இந்த தோல்வி, டென்னிஸ் உலகம் அடுத்த தலைமுறைக்கான நேரத்தை எட்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது.  போட்டிக்கு பிறகு பேசிய ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ் போன்ற ஒரு வீரருக்கு எதிராக நான் இதுவரை விளையாடியதே இல்லை என பாராட்டினார்.  அவருக்கு எதிரான தோல்வியை என்னால் ஏற்கமுடியவில்லை, ஆனாலும் முன்னேறி சென்று தான் ஆக வேண்டும் என ஜோகோவிச் பேசினார். ஃபெடரர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பல்வேறு நட்சத்திரங்களும், அல்காரஸை வாழ்த்தியுள்ளனர்.


அடுத்த தலைமுறை:


டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களான ஃபெடரர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார், நடாலும் அடுத்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், 36 வயதான ஜோகோவிச்சும் நீண்ட காலத்திற்கு ஆடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. இந்நிலையில் தான், அடுத்த தலைமுறை டென்னிஸ் பாதுகாப்பானதாக தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது அல்காரஸின் ஆட்டம். எனில், அடுத்த தலைமுறையில் டென்னிஸை கட்டி ஆளப்போகும் அந்த நபர் யார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்..!