உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமாகிய விராட் கோலி நேற்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விராட் கோலியின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில், “ விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து. அவர் உற்சாகத்துடனே இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலி ஒரு வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்துள்ளார். எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





டி20 கேப்டனாக விராட் கோலியின் அற்புதமான செயல்திறனுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். நடைபெற உள்ள உலககோப்பைத் தொடருக்காக அவருக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அதையும் தாண்டி அவர் இந்தியாவிற்காக தொடர்ந்து ஏராளமான ரன்களை அடிப்பார் என்று நம்புகிறேன். “ இவ்வாறு கங்குலி கூறினார்.


சவ்ரவ் கங்குலி, தோனிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் விராட் கோலி. விராட் கோலியின் இந்த முடிவு குறித்து பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா கூறியிருப்பதாவது, இந்திய அணியின் வழிகாட்டுதல் குறித்து எங்களிடம் தெளிவான திட்டம் உள்ளது. பணிச்சுமை கருதி விராட் கோலி தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். விராட்கோலி ஒரு வீரராக, அணியின் மூத்த உறுப்பினராக எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியை வடிவமைப்பதற்கு பங்காற்றுவார் என்று கூறினார்.




மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து 2017ம் ஆண்டு விலகினார். அப்போது முதல் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி பொறுப்பு வகித்து வருகிறார். விராட் கோலி இதுவரை 89 டி20 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 159 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 94 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 28 அரைசதங்களை அடங்கும்.


விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 45 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அவற்றில் 27 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 14 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2 போட்டிகளுக்கு முடிவில்லை. தோனி 72 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 41 வெற்றிகளை டி20 போட்டிகளில் பெற்றுத்தந்துள்ளார். விராட்கோலியின் டி20 போட்டிகளில் கேப்டனாக வெற்றி சதவீதம் 65.11 ஆகும். இந்திய அணியின் கேப்டனாக டி2- போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் கோலி தன் வசமே வைத்துள்ளார். விராட் கோலி கேப்டனாக மட்டும் 1502 ரன்களை குவித்துள்ளார்.


தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டி20 தொடரை கைப்பற்றிய ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.