கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி முக்கிமான கட்டத்தை எட்டியுள்ளது. அதில், இன்று(22.01.25) நடந்த இரண்டும் காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று, சின்னர் மற்றும் ஷெல்டன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

அசால்ட்டாக அடித்த சின்னர்
இன்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில், உலக தர வரிசையில் முதல் நிலையில் உள்ள இத்தாலி வீரர் ஜேனிக் சின்னர், 8-ம் நிலையில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினோர் ஆகியோர் மோதினர். இதில், தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சின்னர், மினோரை அசால்ட்டாக நேர் செட்களில் தோற்கடித்தார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய சின்னர், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டுகளை 6-2, 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி, வெற்றி வாகை சூடி, அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
ஆக்ரோஷமாக ஆடி ஜெயித்த ஷெல்டன்
முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில், உலக தர வரிசையில் 21-ம் இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் பென் ஷெல்டனும், தர வரிசையிலேயே இல்லாத இத்தாலி வீரர் சோனேகோவுடன் மோதினார். இதில் முதல் செட்டை ஷெல்டன் எளிதாக கைப்பற்றிய நிலையில, இரண்டாம் செட்டில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், 2-ம் செட்டில் வெறித்தனமாக ஆடிய சோனேகோ, 7-5 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இதையடுத்து, 3-வது செட்டை ஷெல்டன் கைப்பற்றிய நிலையில், 4-வது செட்டில் அனல் பறந்தது. இதில், இருவருமே ஆக்ரோஷமாக ஆடினர். 6-6 என சமநிலை அடைந்த செட்டை, பின்னர் 7-6 என்ற கணக்கில் ஷெல்டன் கைப்பற்றினார். இதன் மூலம், 6-4, 7-5, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஷெல்டன் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
அரையிறுதிப் போட்டியில், அவர் நம்பர் 1 வீரர் சின்னரை எதிர்கொள்ள உள்ளார். அந்த போட்டி, மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.