ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த மாதம் தலிபான்கள் கைப்பற்றினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் எப்போதும் போல பணிக்கு செல்லலாம், கல்வி பயிலலாம் என்று கூறினர். ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்கு செல்வதற்கும், கல்வி பயில்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்பதை உலக ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டன. மேலும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டை தடை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.  


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வரும் நவம்பர் மாதம் 27-ந் தேதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.


 






இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுதற்கு தடை விதித்தால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணியுடன் ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய நேரிடும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்த நிலையில், சற்றுமுன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்திகளை வெளியிடும் டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான திட்டமிடப்பட்ட முதல் ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவது உறுதியாகிவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.




ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2009ம் ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானது. மிகவும் இளம் அணியாக இருந்தாலும் அந்த நாட்டு வீரர்கள் பலம் மற்றும் அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்தும் அளவிற்கு திறன் கொண்டவர்கள், இங்கிலாந்து அணியையே ஒருமுறை வீழ்த்தியுள்ளனர். உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத்கான் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்தவர் ஆவார்.






கடந்த 10 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணி மிகவும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து இருந்தது. இந்த நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல் அந்த நாட்டின் எதிர்காலத்துடன் அந்த நாட்டு கிரிக்கெட் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது அதன் தொடக்கப்புள்ளியாக ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடர் ரத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.