பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் முன்னேறின. இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான இறுதிபோட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 7 முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அதிரடியாக ஆடிய அலீசா ஹீலி
நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் பலபரிட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ஓப்பனர்களாக களமிறங்கிய அலீசா ஹீலியும், ஹெய்னசும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹெய்ன்ஸ் 68 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த பெத் மூனி 62 ரன் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் நின்ற அலீசா ஹீலி சிறப்பாக ஆடி 138 பந்துகளில் 26 பவுண்டரிகள் உட்பட 170 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
7 வது முறையாக சாம்பியன்
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்து இருந்தது. 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 44 ஓவர்களில் 285 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. நாட் ஸ்கிவர் 148 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.இதனால் ஆஸ்திரேலியா அணி 7 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று உலககோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அந்த அணிக்கு பரிசாக 10 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.