உலகில் கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகராக ரசிகர்களை கொண்ட போட்டிகளில் ஒன்று டென்னிஸ். உலகின் பணக்கார விளையாட்டுகளில் டென்னிசும் ஒன்றாகும். ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று எனப்படும் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டும் மோதிக் கொள்ளும் ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.

ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று:


இந்தாண்டும் ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று நவம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இன்று இத்தாலி நாட்டில் உள்ள துரின் நகரில் இந்த தொடர் தொடங்குகிறது.


இந்த தொடரில் உலகின் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் பங்கேற்கின்றனர். தரவரிசைப்படி முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், ஜெர்மனியின் ஸ்வெரவ், ஸ்பெயின் நாட்டின் அல்காரஸ், ரஷ்யாவின் மெட்வதேவ், அமெரிக்காவின் ப்ரீட்ஸ், ஆஸ்திரேலியாவின் டி மினார், ரஷ்யாவின் ரூப்லெவ் பங்கேற்கின்றனர். இளம் வீரர்களான இவர்கள் மோதும் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பிக் 3 இல்லாமல் முதன்முறை:


2000ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை டென்னிஸ் உலகை கட்டி ஆண்டவர்களாக திகழ்ந்தவர்கள் ரோஜர் பெடரர், ரபெல் நடால், ஜோகோவிச் ஆகிய மூன்று பேரும் ஆவார்கள். டென்னிஸ் உலகின் தலைசிறந்த கோப்பைகளான அமெரிக்கன் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ப்ரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை பல முறை வென்று அசத்தியவர்கள். இந்த ஏடிபி டென்னிஸ் பட்டத்தையும் பல முறை வென்றுள்ளனர்.


இதன் காரணமாகவே இவர்களை டென்னிஸ் உலகின் பிக் 3 என்று அழைப்பார்கள். 2002ம் ஆண்டுக்கு பிறகு இவர்கள் 3 பேரும் இல்லாமல் ஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று நடப்பது இதுவே முதன் முறை ஆகும். ஜோகோவிச் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. தரவரிசையில்  அவர் 5வது இடத்திலே உள்ளார்.

128 கோடி ரூபாய் பரிசு:


இந்த 8 வீரர்களும் 4 வீரர்களாக 2 குழுக்களாக பிரித்து விளையாட வைப்பார்கள். ஒற்றையர் பிரிவு மட்டுமின்றி இரட்டையர் பிரிவிலும் இந்த போட்டித் தொடர் நடக்கிறது. ஏடிபி டென்னிஸ் கோப்பைக்கான பரிசுத் தொகை அமெரிக்க டாலர் மதிப்பில் 15 லட்சத்து 250 ஆயிரம் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 128 கோடி ஆகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 48 லட்சத்து 81 ஆயிரத்து 100 டாலர் பரிசு ஆகும். அதாவது, ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு ரூபாய் 41 கோடி பரிசு ஆகும்.


இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டென்னுடன் இணைந்து களமிறங்குகிறார். இன்று நடக்கும் முதல் போட்டியில் ஒற்றையர் பிரிவில் மெட்வதேவ் – ப்ரிட்ஸ் மோதுகின்றனர். பின்னர், சின்னர் – டி மினார் மோதுகின்றனர். இதை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 தொலைக்காட்சியில் பார்க்கலாம்.