ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்து 2வது இடத்தை பிடித்தது. இதன்மூலம், சீனா வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றது. இந்தியா இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது.
முதலில் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்திய இந்தியா, முதல் 2 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இதன் பின்னர் மீண்டும் களமிறங்கிய சீனா, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவை வீழ்த்தியது.
இந்த போட்டியில் இந்தியாவின் தரப்பில் இருந்து, லக்ஷ்யா சென் ஒற்றையர் ஆட்டத்தில் முதலாவதாக வந்து 22-20, 14-21 மற்றும் 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று தனது ஆட்டத்தை வென்றார். இதன்பின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஜோடி யோங் டுயோ லியாங், வாங் செங் ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
இந்தியாவுக்கான மூன்றாவது போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஷிபெங் லியை எதிர்கொண்டார். முதல் செட்டில் ஷிஃபெங் 24-22 என கிடாம்பியை வீழ்த்தினார். இதன் பின்னர், இரண்டாவது செட்டில் ஸ்ரீகாந்தை 21-9 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக தோற்கடித்து இந்த ஆட்டத்தில் சீனா வெற்றி பாதைக்கு திரும்பியது. இந்த நிகழ்வின் நான்காவது போட்டி இரட்டையர் பிரிவில் விளையாடியது. இதில் இந்திய ஜோடியான துருவ் கபில் மற்றும் சாய் பிரதீக் களமிறங்கினார். ஆனால் அவர்கள் 21-6 மற்றும் 21-15 என்ற கணக்கில் தொடர்ந்து இரண்டு செட்களில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம்:
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடிய மிதுன் மஞ்சுநாத்து சற்றே தடுமாற, சீனாவின் வெங் ஹொங்யாங் வீரரிடம் தொடர்ந்து இரண்டு செட்களில் ஒருதலைப்பட்சமாக தோல்வியை சந்திக்க நேரிட்டது. முதல் செட்டை 21-12 என மிதுன் மஞ்சுநாத் இழந்த நிலையில், இரண்டாவது செட்டில் 21-4 என தோல்வியை சந்திக்க நேரிட்டது.