2023 ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியானது வருகின்ற செப்டம்பர் மாத சீனாவில் நடைபெற இருக்கிறது.   இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 


காயத்தில் சிக்கிய ஹிமாதாஸ்:


இந்தியாவின் நட்சத்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், காயம் காரணமாக சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஹிமா தாஸுக்கு கடந்த ஏப்ரல் மாதம் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் தற்போது வரை குணமாகவில்லை. இதையடுத்து, இந்திய தடகளப் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.


முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனி நபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் ஹிமா தாஸ். 


இந்திய தடகள கூட்டமைப்பு கூறியது என்ன...? 


இதுகுறித்து, இந்திய தடகளப் தலைமை பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் கூறுகையில், “ ஹிமாதாஸ் காயம் அடைந்தது வருத்தமளிக்கிறது. அவருக்கு தொடை தசையிலும், முதுகு பகுதியிலும் வலி இருக்கிறது. அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும், இதன் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. இதற்கு முன்பு ஹிமா தாஸ் கடந்த மாதம் ராஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஃபெடரேஷன் கோப்பையில் கூட விளையாடவில்லை. இந்த காயம் காரணமாக விதிவிலக்கு பெற்ற வீரர்களை தவிர, அனைவரும் தொடக்க தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவிக்கிறது. 


நீரஜ் சோப்ராவுக்கு விதிவிலக்கு: 


டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும், 2022 காமன்வெல்த் போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினாஷ் சேபலும் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடவில்லை. தசைப்பிடிப்பு காரணமாக இரண்டு பெரிய போட்டிகளில் இருந்து விலக வேண்டியிருந்த நீரஜ் சோப்ரா பயிற்சியைத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றும் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இம்மாத இறுதிக்குள் அவர் உடல் தகுதி பெற்று ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.