ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால் சிங் இணை தங்கம் வென்றது. இறுதிப்போட்டியில் மலேசிய இணையை 2-0 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தி அசத்தியது.






2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 20வது தங்கப் பதக்கம் வென்றது. ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா மற்றும் ஹரிந்தர் பால் ஜோடி சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் மலேசிய அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.


தீபிகா மற்றும் ஹரிந்தர் ஜோடி மலேசியாவின் பிந்தி அஜ்மா மற்றும் முகமது சபிக் ஆகியோரிடம் இருந்து கடும் போட்டியை எதிர்கொண்டது. மிகவும் கடினமான ஆட்டத்தில் இந்திய ஜோடி முதல் கேமை 11-10 என வென்றது. இதன்பிறகு, தீபிகா மற்றும் ஹரிந்தர் ஜோடி 9-3 என இரண்டாவது செட்டில் முன்னிலையில் இருந்தது, ஆனால் மலேசிய ஜோடி பேக் டு பேக் பாயிண்ட்களை எடுத்து ஸ்கோரை சமன் செய்தது. இங்கிருந்து ஹரிந்தர் இரண்டு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது கேமை 11-10 என்ற கணக்கில் வென்று இந்தியாவுக்கு தங்கத்தை வழங்கினார்.






கலப்பு இரட்டையர் ஸ்குவாஷில் தங்கம் வென்ற பிறகு, தீபிகா பல்லிக்கலின் கணவர் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்வீட்டில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தீபிகா மற்றும் ஹரிந்தரின் கொண்டாட்டத்தின் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பதிவு செய்து தினேஷ் கார்த்திக்கிற்கு அனுப்பியுள்ளார். இதற்காக வாஷிங்டன் சுந்தருக்கும் தினேஷ் கார்த்திக் தனது ட்வீட்டில் நன்றி தெரிவித்துள்ளார்.


 சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் தங்கப் பதக்கம் வெல்வதில் இந்தியாவின் மிகச்சிறந்த சாதனை இதுவாகும். முன்னதாக, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 16 தங்கம் வென்றிருந்தது.