சென்னையில் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டு அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 ம் தேதி வரை ராஞ்சியில் முதல் முறையாக பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற இருக்கிறது. 


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் ஏழாவது பதிப்பானது ஹாக்கி இந்தியா மற்றும் ஜார்கண்ட் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவை தவிர, நடப்பு சாம்பியன் ஜப்பான், ரன்னர் அப் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கு முன்னதாக இந்திய ஹாக்கி மகளிர் அணி 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனை தொடர்ந்து நடந்த அடுத்த பதிவில் (2018) இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. 


ராஞ்சி இதற்கு முன்பு கடந்த 2012 முதல் 2015 வரை பல ஹாக்கி இந்தியா லீக் போட்டிகளை நடத்தியுள்ளது. ஜெய்பால் சிங் முண்டா, சில்பானஸ் டுங்டுங், மனோகர் டோப்னோ, அஜித் லக்ரா, நிக்கி பிரதான், சலிமா டெட், லேட் மைக்கேல் கிண்டோ மற்றும் லேட் மராங் கோம்கே உட்பட ஏழு ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கிய பெருமையை இந்த ஸ்டேடியம் பெற்றுள்ளது. 






ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 நடத்துவது எங்களுக்கு கிடைத்த பெருமை என்று  ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஜார்கண்ட் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ராஞ்சியில் முதல் முறையாக நடைபெறவுள்ளது. இதற்காக, ஆசியாவின் சிறந்த மகளிர் ஹாக்கி அணிகளை வரவேற்பது எங்களுக்கு கிடைத்த பெருமையும், பெரும் பாக்கியமும் ஆகும். 


கடந்த 10 ஆண்டுகளில் ஜார்கண்டில் ஹாக்கி மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த பல வீரர்கள் ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளில் இந்தியாவுக்காக விளையாடி வருகின்றனர். நாங்கள் பல ஆண்டுகளாக விளையாட்டில் பல ஒலிம்பிக் வீரர்களை உருவாக்கியுள்ளோம். 






ராஞ்சியில் நடைபெறும் ஆசிய சாம்பியன் டிராபி 7வது பதிப்பின் மூலம், விளையாட்டில் ஈடுபட பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். ” என தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி பேசுகையில், “ மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ ஹேமந்த் சோரனுக்கு ஹாக்கி இந்தியா சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.