மகளிருக்கான ஆறாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் தென் கொரியாவில் நடைபெற்றது வருகிறது. இந்திய மகளிர் ஹாக்கி பங்கேற்றிருக்கும் இத்தொடரில், இந்திய வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
2020-ம் ஆண்டு நடக்க வேண்டிய மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடர், கொரோனா பரவல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி, தொடக்க லீக் ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து, தனது இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியா அணியை சந்திக்க இருந்தது. போட்டிக்கு ஒரு நாள் முன்பு, இந்திய அணி வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், போட்டி ரத்து செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட வீராங்கனை யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
போட்டி ரத்து செய்யப்பட்டதால், இந்திய அணி வீராங்கனைகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால், சீன அணியை எதிர்த்து இந்திய அணி அடுத்து விளையாட இருந்த மூன்றாவது ஆட்டமும் ரத்தானது.
அடுத்தடுத்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்தே இந்திய அணி வெளியேறியுள்ளதாக இந்திய ஹாக்கி சம்மேளனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறி இருப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
உலக ஹாக்கி தரவரிசையில், மகளிர் அணி 9வது இடத்தில் இருக்கிறது. கொரோனா தொற்றல் ஒத்திவைக்கப்பட்டு பின்பு மீண்டும் தொடங்கி இருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்திய மகளிர் வெளியேறி இருப்பது அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.
இதே போல, அணி வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மலேசியா அணி தொடரில் இருந்து வெளியேறியது, இப்போது இந்திய அணியும் வெளியேறியுள்ளதால் இரு அணி வீராங்கனைகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்