மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கு, அரசியல் தலைவர்கள் பதவி வகித்து வருவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
தொடரும் சர்ச்சை:
பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரஜ் பூஷணுக்கு எதிராக, மல்யுத்த வீரர்கள் ஈடுபட்டுள்ள போராட்டம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதே நேரம், பொதுமக்களிடையே பரவலாக ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. ”விளையாட்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம், விளையாட்டு அமைப்புகளுக்கு அரசியல்வாதிகள் ஏன் தலைமை தாங்குகின்றனர்” என்பது தான் இந்த கேள்வி. ஏனென்றால் தேசிய அளவிலான விளையாட்டு அமைப்புகளில் தொடர்ந்து, மாநில அளவிலான விளையாட்டு அமைப்புகள் வரையிலும் அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளது. இதற்கு உதாரணமாக பல்வேறு விளையாட்டு அமைப்புகளை கூறலாம்
பிசிசிஐ:
குறிப்பாக பல்லாயிரம் கோடி ரூபாய் புரண்டாலும் வரி கட்டாத அமைப்பான, இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளர் பதவியை ஜெய் ஷா வகித்து வருகிறார். இவர் நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் மகன் ஆவார். இவருக்கோ கிரிக்கெட்டிற்கோ எந்தவித அடிப்படை தொடர்பும் கூட இல்லை என்பது தான் உண்மை. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
ஐபிஎல்:
உலகின் இரண்டாவது பணக்கார விளையாட்டு தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் தலைவராக இருப்பவர் அருண் சிங் துமல். இவர் மத்திய விளையாட்டு அமைச்சரான அனுராக் தாக்கூரின் சகோதரர் ஆவார்.
இந்திய வில்வித்தை சங்கம்:
இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவராக மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா, கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். பாஜகவை சேர்ந்த இவர், எந்தவொரு விளையாட்டுப் பிரிவிலும் பெரியதாக சாதித்தது இல்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக இறகுப்பந்து சங்கம்:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான அன்புமணி ராமதாஸ், தற்போது தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
இந்திய ஜூடோ கூட்டமைப்பு:
இந்திய ஜுடோ கூட்டமைப்பின் தலைவராக, பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவரும், அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான பர்தாப் சிங் பாஜ்வா பொறுப்பு வகித்து வருகிறார். அதோடு, செஸ், டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, என நாட்டில் உள்ள பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கும் அரசியல் தலைவர்கள் தான் தலைமை தாங்கி வருகின்றனர். இந்திய வரலாற்றில் இது ஒன்றும் புதியதல்ல.
நீண்ட வரலாறு:
பிரியா ரஞ்சன் தாஸ்முன்ஷி, பிரஃபுல் படேல், விகே மல்ஹோத்ரா, ஜகதீஷ் டைட்லர், சுரேஷ் கல்மாடி, வித்யா ஸ்டோக்ஸ், திக்விஜய் சிங், அபே சௌதாலா, அஜய் சௌதாலா, கேபி சிங் தியோ, விசி சுக்லா, ஆர்கே ஆனந்த், விஜய் மல்யா, சுக்தேவ் சிங் திண்ட்சா, சரத் பவார் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பன்னெடுங்காலம் இந்தியாவின் விளையாட்டு அமைப்புகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
காரணம் என்ன?
விளையாட்டுத்துறை சார்ந்த எத்தனையோ சாதனையாளர்கள் இந்தியாவில் இருக்கும்போது, அவர்களை விடுத்து அரசியல் தலைவர்கள் ஏன் விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களாக இருக்க வேண்டும் என பலமுறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு, அரசியல்வாதிகள் விளையாட்டு அமைப்புகளில் அங்கம் வகிப்பதன் மூலம் பல்வேறு காரியங்களை எளிதாக செய்ய முடிகிறது. செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் ஸ்பான்சர்களை ஒருங்கிணைப்பதும், அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறுவதும் எளிதாக உள்ளது. அரசாங்கத்திற்கு நெருக்கமானவரகளாக இருப்பதால், வீரர்களுக்கு தேவையான வசதிகளை எளிதாக பெற்றுத்தர முடியும். இதன் காரணமாக தான் அரசியல்வாதிகள் கூட்டமைப்புத் தலைவர்களாக விரும்பப்படுகிறார்கள்” என தங்கள் தரப்பு நியாயத்தை கூறுகின்றனர்.
தரம் என்ன ஆகும்?
சரியான நிர்வாகம் வழங்குவதற்காகவே விளையாட்டு அமைப்புகளின் பதவிகளை வகிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், விளையாட்டின் தரம் குறித்து இவர்கள் யாருமே பெரியதாக பேசுவதாக தெரியவில்லை. குறிப்பிட்ட விளையாட்டில் நல்ல அனுபவம் பெற்ற ஒருவரால் மட்டுமே, எதிர்கால தலைமுறைக்கான தேவை என்ன, என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும், யாருக்கு எந்த நுணுக்கங்களில் கூடுதல் பயிற்சி தேவை என்பது போன்ற, விளையாட்டின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதே உண்மை.