நடிகர் அஜித்குமார் தமிழ் திரையுலகில் உச்ச நடிகர் என்பதையும் தாண்டி, தற்போது கார் ரேஸிங் மூலம் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறார். ஏற்கனவே சில சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று அசத்திய அவரது அஜித்குமார் ரேஸிங் அணி, தற்போது ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடத்தை பிடித்து, இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளது.
கார் பந்தய நிறுவனம் தொடங்கி அசத்தும் அஜித்
‘தல‘ என்று கோலிவுட் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித், பைக் மற்றும் கார் பந்தயங்களில் ஆர்வமுள்ளவர் என்பது ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், சமீபத்தில் தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை தொடங்கி, அற்காக ஒரு அணியை கட்டமைத்த அஜித், சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்க ஆரம்பித்தார்.
சினிமாவில் எப்படி ஒரு மாபெரும் வெற்றியை பெற்று உச்ச நட்சத்திரமாக விளங்குகிறாரோ, அதே போல், கார் பந்தயத்திலும் தற்போது முத்திரை பதித்து, வெற்றி வாகை சூடி வருகிறார்.
ஏற்கனவே அவரது ரேஸிங் அணி, துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்று அசத்தியது. துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் 3-வது இடத்தை வென்ற நிலையில், பிரான்சில் நடைபெற்ற 12 மணி நேர ரேஸிங்கில் 2-வது இடத்தையும் பெற்றது. அதேபோல், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் தான், ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது.
ஸ்பெயினில் அசத்திய அஜித்குமார் ரேஸிங் அணி
ஸ்பெயினில் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில், கடந்த 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற்ற Creventic 24H என்ற ரேஸில், அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொண்டது. இந்த போட்டியில் அஜித்குமாரின் அணி 3-வத இடத்தை பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமையை தேடித் தந்துள்ளது அஜித்குமார் ரேஸிங் அணி. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது. மேலும், வெற்றிக் கோப்பையை பெறும்போது, தனது அணியினர் மற்றும் குடும்பத்தினரை மேடையேற்றி பெருமைகொள்ளச் செய்துள்ளார் அஜித். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.