இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் புனேயில் நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்த இந்தியா 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 78, ஷிகர் தவான் 67, ஹர்தி பாண்ட்யா 64 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3, ரஷித் 2, டாப்லி, சாம் குரான், ஸ்டோக்ஸ், மொயின் அலி, லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 330 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து ஆட்டத்தை தொடங்கியது. ராய், பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறிய நிலையில், லிவிங்ஸ்டனும், மாலனும் ஜோடி சேர்ந்து அருமையாக விளையாடினர்.
பின்னர், லிவிங்ஸ்டன் 36, மாலன் 50, மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழக்க, 200 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது. இதனால், இங்கிலாந்து தோல்வி அடைவது நிச்சயம் என்ற இருந்த நிலையில், தனி ஒருவனாக சாம் குரான் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து கோலி படையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். இவருடன் கூட்டுச்சேர்ந்து அடில் ரஷீத்தும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், ஆட்டத்தில் அனல் பறந்தது.
ஆனால், கடைசி ஓவரை நடராஜன் நன்றாக வீசியதால், அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன், 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று விதமான தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.
கடைசி வரை போராடிய சாம் கரன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4, புவனேஸ்வர் குமார் 3, நடராஜன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
ஆட்டநாயகன் விருது சாம் கரனுக்கும், தொடர் நாயகன் விருது பேர்ஸ்டோவுக்கும் வழங்கப்பட்டது.