Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபாடு செய்பவர்கள் அந்நாளில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து புனித நீராட வேண்டும். அதற்கு முந்தைய நாள் வீடு, பூஜையறை, பூஜை பொருட்கள் ஆகியவற்றை நன்கு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய நாளில் வழிபட நல்ல நேரம் எப்போது உள்ளிட்ட தகவல்களைக் காணலாம்.
விநாயகனே.. வினை தீர்ப்பவனே..
முழு முதற்கடவுளாக அறியப்படும், இன்னல்களை தீர்ப்பவர் என வழிபடப்படும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் வரும் இப்பண்டிகை வட மாநிலங்களில் 10 நாட்களும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. வீதியெங்கும் வண்ண மயமான விநாயகர் சிலைகள் இருப்பதைக் காணலாம். இந்த சிலைகள் யாவும் 3,5,7 என்ற நாள் கணக்கில் நீர் நிலைகளில் வெகு விமரிசையாக கரைக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை
விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபாடு செய்பவர்கள் அந்நாளில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து புனித நீராட வேண்டும். அதற்கு முந்தைய நாள் வீடு, பூஜையறை, பூஜை பொருட்கள் ஆகியவற்றை நன்கு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். புனித நீராடியப் பின் நன்கு துவைத்த அல்லது புதிய ஆடைகளை அணியலாம். இந்நாளில் விநாயகருக்கு காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பூஜை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி பூஜை மேற்கொள்ள மதிய நேரம் சிறந்தது.
கொழுக்கட்டை, அவல் பொரி, இனிப்புகள், சர்க்கரை பொங்கல், சுண்டல் என விநாயகருக்கு உகந்த பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். வண்ண பூக்கள் மட்டுமல்லாமல் விநாயகருக்கு உகந்த அருகம்புல் மாலை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
விநாயகரை வழிபடும்போது அவருக்குரிய மந்திரங்கள், பக்தி பாடல்கள் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். எதுவும் தெரியாவிட்டால் டிவி அல்லது செல்போனில் பாடல்களை ஒலிக்க விடலாம். கண்டிப்பாக கணபதியாய நமஹ என உச்சரிக்க வேண்டும். வீட்டில் வழிபாடு முடிந்த பின் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
விநாயகரை வழிபட உகந்த நேரம் எது?
விநாயகர் சதுர்த்தி இம்முறை திங்கட்கிழமை வருவதால் அன்றைய நாளில் காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரையும், மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரையும், காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் நல்ல நேரம் உள்ளது.
இதனைத் தவிர காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம், மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை குளிகை, காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம் என இருப்பதால் அந்த நேரம் தவிர்த்து மற்ற காலங்களில் நாம் வழிபாடு மேற்கொள்ளலாம். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இருக்கலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்





















