எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானை வணங்கியே தொடங்குவது வழக்கம் ஆகும். விநாயகப்பெருமானை போற்றி வணங்கும் விநாயகர் சதுர்த்தி(Vinayagar Chathurthi) வரும் 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.


விநாயகப் பெருமான் 32 வகை வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அவரது 32 வகை அவதாரங்களையும்(32 Forms of Lord Ganesha) கீழே விரிவாக காணலாம்.



  1. பாலகணபதி :


பாலகணபதி நான்கு திருக்கரங்களை கொண்டவர். செங்கதிர் நிறத்தில் காட்சி தரும் பாலகணபதி மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் மற்றும் கரும்பு ஆகியவற்றை திருக்கரங்களில் ஏந்தி காட்சி தருபவர்.



  1. தருண கணபதி :


தருண கணபதி 8 கரங்களை கொண்டவர். சிவந்த நிற மேனியை கொண்ட தருண கணபதி தனது எட்டு கரங்களில் அங்குசம், பாசம், உடைந்த தந்தம், கரும்புத்துண்டு, நெற்கதிர்கள், மோதகம், விளாம்பழம் மற்றும் நாவற்பழம் ஆகியவற்றை ஏந்தியவர்.



  1. பக்தி கணபதி :


பக்தி கணபதி நான்கு திருக்கரங்களை கொண்டு வெள்ளை நிறத்தில் காட்சி தருபவர். திருக்கரங்களில் பாயாசக் கிண்ணம், தேங்காய், மாம்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை வைத்திருப்பார்.



  1. வீர கணபதி


16 திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருபவர் வீர கணபதி. செக்கச் சிவந்த திருமேனியுடைய வீர கணபதி வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு மற்றும் கொடி ஆகியவற்றை தன்னுடைய 16 திருக்கரங்களில் ஏந்தியிருப்பார்.



  1. சக்தி கணபதி :


அந்தி வான நிற மேனியை கொண்டவர் சக்தி கணபதி. அபய ஹஸ்தம், பாசம், பூமாலை ஆகியவற்றை தனது கைகளில் தாங்கிய சக்தி கணபதி தன்னுடைய ஒரு கையில் தேவியை அணைத்திருப்பார். தனது மடியில் பச்சை நிறத்திலான தேவியை தாங்கியிருப்பார்.



  1. துவிஜ கணபதி :


பால் போன்ற வெண்மையான நிற திருமேனியை கொண்டவர் துவிஜ கணபதி. நான்முகமான துவிஜ கணபதி நான்கு முகங்களை கொண்டவர். தனது கரங்களில் புத்தகம், அட்சமாலை, கமண்டலம் மற்றும் தண்டலம் ஆகியவற்றை தனது கரங்களில் ஏந்தியவர்.



  1. சித்தி கணபதி :


சித்தி கணபதி பசுமை மற்றும் பொன் நிற மேனியை கொண்டவர். நான்கு கரங்களை கொண்ட சித்தி கணபதி தனது திருக்கரங்களில் பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை மற்றும் மாம்பழத்தை தாங்கியுள்ளார். தனது துதிக்கையில் மோதகத்தை தாங்கி இருப்பார்.



  1. உச்சிஷ்ட கணபதி :


வானின் நிறமான நீல நிறத்தில் உச்சிஷ்ட கணபதி காட்சியளிக்கிறார். உச்சிஷ்ட கணபதி 6 திருக்கரங்களை கொண்டவர். இரண்டு திருக்கரங்களில் நீலோத்பவ மலர்களையும், மற்ற கரங்களில் மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றைத் தாங்கியுள்ளார். காம மோகிதராக காட்சி தரும் உச்சிஷ்ட கணபதி பெண்ணின் மேனியில் துதிக்கையை வைத்து காட்சி தருகிறார்.



  1. விக்ன கணபதி :


விக்ன கணபதி ஜொலிக்கும் தங்க நிறத்தை உடையவர். 10 திருக்கரங்களை கொண்ட அவர் சக்கரம், சங்கு, கோடாரி, உடைந்த தந்தம், பாணம், கரும்பு வில், பூங்கொத்து, புஷ்பபாணம், பாசம், மாலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.



  1. ஷிப்ர கணபதி :


ஷிப்ர கணபதி செந்திறத்தில் காட்சி தருகிறார். உடைந்த தந்தம், கற்பக கொடி, பாசம் மற்றும் அங்குசத்தை தனது நான்கு திருக்கரங்களில் ஏந்தி காட்சி அளிப்பவர்.



  1. ஹேரம்ப கணபதி :


ஐந்து முகத்தனை என்று பக்தர்களால் வணங்கப்படும் ஹேரம்ப கணபதி 5 முகத்தை கொண்டவர். பத்து கரங்களை கொண்ட ஹேரம்ப கணபதி தனது கைகளில் இரண்டு அபய மற்றும் வரத முத்திரைகளை ஏந்தியுள்ளார். மற்ற கரங்களில் பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.



  1. லட்சுமி கணபதி :


லட்சுமி கணபதி வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறார். எட்டு திருக்கரங்களை கொண்ட லட்சுமி கணபதி தனது கரங்களில் நீல நிற தாமரைப்பூ, கலசம், அங்குசம், பாசம், கற்பக கொடி, கட்சம், வரதம், கிளி, மாதுளம் பழம் ஆகியவற்றை ஏந்தி, இரு தேவிகளுடன் காட்சி தருகிறார்.



  1. மகா கணபதி :


மகா கணபதி 10 கரங்களுடனும், மூன்று கண்களுடனும் செந்நிற திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். மகா கணபதி தன் முடியில் பிறை சந்திரனை கொண்டு காட்சி தருகிறார். தாமரை மலர் ஏந்திய தேவியை இடது தொடையில் அமரவைத்து தனது கையால் அணைத்து இருப்பார். மற்ற கரங்களில் கதை, கரும்பு, வில், சக்கர, பாசம், தந்தம், ரத்ன கலசம், நெற்கதி, நீலோத்பவம் மற்றும் மாதுளை பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.



  1. விஜய கணபதி :


விஜய கணபதி தன்னுடைய வாகனமான பெருச்சாலியின் மீது அமர்ந்திருப்பார். தன்னுடைய 4 கரங்களில் கணபதி, பாசம், அங்குசம், உடைந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.



  1. நிருத்த கணபதி :


தங்க நிறத்தில் ஜொலிக்கும் நிருத்த கணபதி தன்னுடைய ஆறு திருக்கரங்களில் மோதிரம் அணிந்திருப்பதுடன், அங்குசம், பாசம், அபூபம், கோடாரி மற்றும் தந்தத்தை ஏந்தியிருப்பார். நிருத்த கணபதி கற்பக விருட்சக மரத்தின் கீழ் அமர்ந்து காட்சி தருவார். நிருத்த கணபதிக்கு கூத்தாடும் பிள்ளையார் என்று ஒரு பெயரும் உண்டு.



  1. ஊர்த்துவ கணபதி :


ஊர்த்துவ கணபதி தங்க நிறத்தில் ஜொலிப்பவர். தாமரை மலர்களை தனது கரங்களில் தாங்கியவர். பச்சை நிற மேனியை கொண்ட தேவியை அணைத்தவாறு தந்தம், பாணம், கரும்பு வில், தாமரை, நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.



  1. ஏகாட்சர கணபதி :


ஏகாட்சர கணபதி செந்நிற உடை, செம்மலம் மாலையை அணிந்து பெருச்சாலி வாகனத்தின் மீது செந்நிறமாக காட்சி தருபவர். பெருச்சாலி வாகனத்தின் மீது பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பவர். தனது தலையில் பிறை சந்திரனை ஏந்தியதுடன், மூன்று கண்களுடனும் காட்சி அளிப்பவர்.



  1. வர கணபதி :


நான்கு திருக்கரங்களில் திரயாக்‌ஷர கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தி பொன்னிற மேனியில் காட்சி அளிக்கிறார். மோதகத்தை தும்பிக்கையில் தாங்கியுள்ளார்.



  1. ஷிப்ரபிரசாத கணபதி :


பெரிய வயிறை கொண்ட ஷிப்ரபிரசாத கணபதி ஆபரணங்களை சூடி ஆறு திருக்கரங்களை கொண்டவர். அவர் பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை ஆகியவற்றை தனது கைகளில் தாங்கியுள்ளார். ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் தாங்கியுள்ளார்.



  1. ஹரித்ரா கணபதி :


ஹரித்ரா கணபதி மஞ்சள் நிறத்தில் காட்சி அளிப்பதுடன் தனது கைகளில் பாசம், அங்குசம், தந்தம் மற்றும் மோதகத்தை ஏந்தியுள்ளார்.



  1. திரயாக்‌ஷர கணபதி :


திரயாக்ஷ்ர கணபதி தனது கரங்களில் பாசம், அங்குசம், தந்தம் மற்றும் மாம்பழத்தை ஏந்தி பொன்னிறத்தில் காட்சி அளிக்கிறார். துதிக்கையில் மோதகத்தை ஏந்தியுள்ளார்.



  1. ஏகாந்த கணபதி :


ஏகாந்த கணபதி பெரிய வயிறுடன் நீல நிறத்தில் காட்சி அளித்தார். தனது கைகளில் கோடாரி, அட்சமாலை, தந்தம், லட்டு ஆகியவற்றை ஏந்தி காட்சி அளிக்கிறார்.



  1. சிருஷ்டி கணபதி :


சிருஷ்டி கணபதி சிவந்த மேனியுடன் தனது 4 கரங்களில் காட்சி அளிக்கிறார். அவரது கரங்களில் அங்குசம், தந்தம், பாசம், மாம்பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். சிருஷ்டி கணபதி பெருச்சாலி வாகனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார்.



  1. உத்தண்ட கணபதி :


உத்தண்ட கணபதி 10 திருக்கரங்களில் பாசம், நீலபுஷ்பம், தாமரை, தந்தம், கரும்புவில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம்பழம், மாலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். பச்சை நிற மேனி தேவியை இடது தொடையில் ஏந்தியுள்ளார்.



  1. ரணமோசன கணபதி :


ரணமோசன கணபதி வெண்பளிங்கு மேனியுடன் காட்சி அளிக்கிறார். ரணமோசன கணபதி செந்திற பட்டாடையில் காட்சி தருகிறார். பாசம், அங்குசம், தந்தம் மற்றும் நாவற்பழத்தை தனது கரங்களில் ஏந்தியுள்ளார்.



  1. துண்டி கணபதி :


காசி சேஷத்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற துண்டி கணபதி தனது நான்கு திருக்கரங்களிலும் அட்சமாலை, கோடாரி, ரத்ன கலசம் மற்றும் உடைந்த தந்தத்தை ஏந்தியுள்ளார்.



  1. துவிமுக கணபதி :


துவிமுக கணபதி இரு முகங்களை கொண்டவர். பசும்நீல நிறத்தில் காட்சி தரும் துவிமுக கணபதி செந்நிற பட்டாடை உடுத்தி தந்தம், பாசம், அங்குசம் மற்றும் ரத்ன பாத்திரத்தை ஏந்தியுள்ளார்.



  1. மும்முக கணபதி :


மூன்று முகத்துடன் காட்சி தரும் மும்முக கணபதி பொற்றாமரை ஆசனத்தில் காட்சி தருகிறார். செந்திற மேனியை கொண்ட அவர் பாசம், அங்குசம்,, அட்சமாலை, அமுத கலசம், அபய மற்றும் ஹஸ்த முத்திரைகளை தாங்கி காட்சி தருகிறார்.



  1. சிங்க கணபதி :


சிங்க கணபதி வெண்மை நிறத்தில் சிங்க வாகனத்தில் காட்சி தருகிறார். இரு திருக்கரங்களில் அபயம் மற்றும் வரதம் முத்திரைகளை தாங்கியதுடன், கற்பக கொடி, வீணை, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை மற்ற ஆறு கரங்களில் தாங்கியுள்ளார்.



  1. யோக கணபதி :


சிவந்த சூரியனின் நிறத்தில் காட்சி தரும் யோக கணபதி நீல நிற ஆடையை உடுத்தி பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவற்றை தனது கரங்களில் ஏந்தி, யோக நிலையில் காட்சி தருகிறார்.



  1. துர்க்கா கணபதி :


துர்க்கா கணபதி பசும்பொன் நிறத்தில் காட்சி அளிக்கிறார். தனது எட்டு திருக்கரங்களில் அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றை தாங்கி பெரிய உருவத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருபவர்.



  1. சங்கடஹர கணபதி :


இடது தொடையில் நீலநிற பூவை ஏந்திய தேவியை ஏந்தி இளஞ்சூரியன் நிறத்தில் காட்சி அளிப்பவர். செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன் நீல நிற ஆடை அணிந்து காட்சி அளிப்பவர். வரத முத்திரையுடன் அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தை தாங்கி காட்சி தருபவர்.